மருத்துவப் படிப்பில் காலியிடம்.. எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்க புதுவை அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மருத்துவ படிப்பில் பழங்குடியின பிரிவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ஹேமலதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுத்திருந்தும் கூட, இடஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. கலந்தாய்வின் முடிவில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காலியாக இருந்த இரண்டு இடங்கள் பட்டியலினத்தவர்களை கொண்டு நிரப்பட்டு விட்டது. தற்போது அவர்கள் ஜிப்மர் கல்லூரிக்கு சென்று விட்டதால், பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், "கலந்தாய்வுக்கு பின்னர் பழங்குடியினர் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை கொண்டே நிரப்பியிருக்க வேண்டும். புதுச்சேரி அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரர் மற்றும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவு மாணவருக்கு இடம் அளிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க சட்டத்தை உருவாக்கிய அரசு, அதற்கு துரோகம் இழைக்கும் வகையில் கடினமான நிலைக்கு அவர்களை தள்ளாது என நீதிமன்றம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த இரு இடங்களை ஒதுக்குவதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தோர், வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோரின் இடஒதுக்கீடுகளும் பாதிக்கப்படாது என நம்புகிறேன்" என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications