'ஜெய்பீம்' என எழுதியதால் மாணவர்கள் சஸ்பெண்ட்! கல்வி நிறுவனத்திற்கு குட்டு வைத்த நீதிமன்றம்
சென்னை: சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள், தங்கள் விடுதி சுவரில் ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம் என எழுதியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சமூக பணி பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவர்களாக அஸ்லம், சயீத், நஹல் இப்னு பயின்று வந்திருக்கிறார்கள்.

இவர்கள் மூவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், தாங்கள் தங்கியிருந்த விடுதியின் சுவற்றில் ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம் என்று எழுதியிருக்கிறார்கள். இது தொடர்பாக கல்வி நிறுவனம் அவர்களை கண்டித்திருக்கிறது. இந்நிலையில், தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக இந்த மூன்று மாணவர்களும் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விடுதி சுவரை சேதப்படுத்தியதாக கூறி நிறுவனம் சஸ்பெண்ட் செய்வதாக விளக்கமளித்திருந்தது.
இதனையடுத்து மூன்று மாணவர்களும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் பா.மோகன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்வி நிறுவனத்தின் உதவி பதிவாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்போராட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாணவர்கள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதனையடுத்து கல்வி நிறுவனம் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாணவர்கள் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருப்பினும், மற்ற சூழல்களை கருத்தில் கொண்டு சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
பாலஸ்தீன விடுதலைக்காக சர்வதேச அளவில் குரல்கள் எழுந்து வரும் நிலையில், அது குறித்து கருத்தை வெளிப்படுத்தியதை குற்றமாக கருதியும், ஜெய்பீம் என எழுதியதற்காகவும் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications