அப்பளம் வர இவ்வளவு நேரமா? சூடான கணவன்.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி.. ஹைகோர்ட் பரபர உத்தரவு
சென்னை: அப்பளம் பொறிக்க நேரமானதால் கோபமடைந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் அப்துல் ரஷித். இவருக்கும், இவரது மனைவி ஆயிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சூழலில், கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவுக்கு அப்பளம் பொறித்து தருமாறு மனைவி ஆயிஷாவிடம் அப்துல் ரஷித் கேட்டுள்ளார். ஆனால், அப்பளம் பொறிக்க தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

கொதிக்கும் எண்ணெய்யை..
இதனால் ஆத்திரமடைந்த கணவர் அப்துல் ரஷித், "அப்பளம் பொறிக்க இவ்வளவு நேரமா.." என கேட்டு சண்டை போட்டுள்ளார். இருவரும் இடையே நீண்டநேரமாக இதுதொடர்பாக காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மனைவி ஆயிஷா, கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்துல் ரஷித், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேல்முறையீடு
இதன் தொடர்ச்சியாக, போலீஸார் ஆயிஷாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம், ஆயிஷாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆயிஷா தரப்பில் சென்ன உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

"மரண வாக்குமூலம் பெறவில்லை"
அப்போது ஆயிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை. உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த சாட்சியின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில், "காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்துல் ரஷித்திடம் போலீஸார் மரண வாக்குமூலம் பெறவில்லை.

"அனுபவித்த தண்டனையே போதும்"
பிரதேப் பரிசோதனை அறிக்கையை தவிர வேறு எந்த மருத்துவ ஆவணங்களும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. சம்பவம் நடந்து 28 நாட்களுக்கு பிறகே அப்துல் ரஷீத் உயிரிழந்திருக்கிறார். இதற்கு, சிகிச்சை குறைபாடு உள்ளிட்ட வேறு பல காரணங்களும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, குற்றவாளி ஆயிஷா இதுவரை அனுபவித்த சிறைத்தண்டனையே போதுமானது. அதற்கேற்ப அவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனை குறைக்கப்படுகிறது" என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications