நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு.. இறுதி விசாரணைக்கு தேதி குறித்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' ஷூட்டிங் காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் மாதம் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களது திருமண ஆவணப் படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஏற்கெனவே தனுஷிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் வேண்டுமென்றே எந்த பதிலும் கொடுக்காமல், இப்போது ஆவணப்படம் வெளியானபோது நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறி நயன்தாரா அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். வெறும் 3 விநாடி காட்சிகளுக்காக ரூ.10 கோடி கேட்டதாக கொந்தளித்திருந்தார் நயன்தாரா.
இதையடுத்து நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications