திமுக அரசியல் லாபம்.. தமிழக அரசு இப்படி தரம் தாழ்ந்து போக கூடாது! நீதிமன்ற உத்தரவை வரவேற்ற அண்ணாமலை!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அதற்கு தடை விதித்தது தமிழக அரசு.
இது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்த ஜிஆர் சுவாமிநாதன் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டார். இதை எடுத்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகர் காவல் துறை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.

திருப்பரங்குன்றம் தீபம்
இந்த வழக்கினை விசாரணை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே கே எம் ராமகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்துள்ளனர். மேலும் பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவதை ஏற்க முடியாது எனவும், அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
அண்ணாமலை கருத்து
ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
திமுக அரசு மீது விமர்சனம்
சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது. திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications