ரூ.6000 நிவாரணம்.. ரொக்கமா வருமா? வங்கி கணக்கில் வருமா? உயர்நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், நிவாரணத்தை ரொக்கமாக வழங்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
இந்நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில்,
“மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிவாரண நிதியானது ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் ரேஷன் மூலம் ரொக்கமாக நிவாரண நிதியை விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ரேஷன் மூலம் ரொக்கமாக நிவாரணம் வழங்கப்பட்டால் அதில் அதிக அளவு முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சென்று சேராது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கனவே 37 லட்சம் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
“வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது. ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்த முடியாது, அதை மறுக்க முடியாது, நிவாரணத்தை முடக்க முடியாது. மேலும் நிவாரணம் வழங்குவது தற்போதைய தருணத்தில் உடனடி தேவை என்பதால் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை.
நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துகிறோம். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறோம்” என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications