கமலின் தக் லைஃப் படத்தை நெட்டில் வெளியிட தடை.. உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிடோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது. இதனையடுத்து புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், படத்தை வெளியிட பட நிறுவனம் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் தக்லைப் படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தக் லைஃப்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கிறார். குறிப்பாக நடிகர் கமலஹாசனும் சிம்புவும் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். சிம்பு ஏற்கனவே மணிரத்தினத்தின் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கமல், சிம்பு மட்டுமல்லாது, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்ற கமல்ஹாசனின் பேச்சு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னட மொழியை கமல்ஹாசன் அவமதித்து விட்டதாக கூறி அங்குள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்திய நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ் அமைப்புகளும் ஆதரவாக திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் நிறைய பேர் நானே ஐந்து முறை பத்து முறை படத்தை பார்ப்பேன் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications