திடீரென மூடப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகள்.. இன்று இரவு 8 மணி வரை தடை.. ஏன் தெரியுமா?
சென்னை: 150 ஆண்டுகள் பழமையான சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகள் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மூடப்பட்டிருக்கிறது. இன்று இரவு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளுமே மூடப்பட்டிருக்கும்.
இந்தியாவின் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று (மெட்ராஸ் ஹை கோர்ட்). 1862 ஆம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி விக்டோரியா மகாராணியால் நிறுவப்பட்ட இந்தியாவின் மூன்று உயர் நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 5 நுழைவு வாயில்கள் உள்ளன.
சென்னை உயர்நீதிமன்றமானது அரசின் சொத்து; பொதுமக்கள் பயன்படுத்துகிற இடம் அல்ல என்பதை நினைவூட்டும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என யாருமே சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழைய முடியாது.
இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மூடப்பட்டன. இந்த நுழைவாயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை மூடப்பட்டிருக்கும். இந்த 24 மணிநேரம் யாருமே சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழைய முடியாது. ஆனால் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications