மூக்கணாங்கயிறு போட தடை கோரிய வழக்கு.. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மாடுகளைக் கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு போடுவதால், மாடுகள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.
அப்போது நீதிபதிகள், உலக அளவில் மாடுகளைக் கட்டுப்படுத்த, இந்த நடை முறை தான் பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்டனர். மேலும் இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து, முறையாக இதைப் பின்பற்றச் செய்வோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications