"போலீசால் முடியல".. சீமான் வீட்டு பணியாளர் தரப்பு வைத்த வாதம்! சென்னை ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சம்மன் வழங்கினர். சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோர் கிழித்தனர். அப்போது அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

சீமான் வீட்டு வாசல் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அரசியல் உள்நோக்கத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு தங்களிடம் உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம், மனு குறித்து பதில் அளிப்பதற்காக வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் எதிர்தரப்பு வழக்கறிஞர், காவல்துறையின் இயலாமை காரணமாகவே வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க கோருவதாக குற்றம்சாட்டினார். மேலும், வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை மறுநாளுக்கு (மார்ச் 13) ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications