காங்கிரஸை பக்கத்துல வச்சுகிட்டு அமித்ஷாவின் கருணை கிடைக்குமா? பொன்ராஜ் சொன்ன பிம்பிளக்கா பிளாப்பி
சென்னை: திமுக அரசால் செய்ய முடிந்த ஒரு விஷயத்தை ஏன் தவெக அரசால் செய்ய முடியவில்லை? தவெக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் மற்றும் வெள்ளை அறிக்கை வெறும் ஏமாற்று வேலை, இது ஒரு பிம்பிளிக்கா பிளாப்பி வெள்ளை அறிக்கை என்று காட்டமாக விமர்சித்துள்ளார் பிரபல அரசியல் விமர்சகர் பொன்ராஜ்.. அத்துடன் காங்கிரஸைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அமித்ஷாவின் கருணை உங்களுக்குக் கிடைக்குமா? என்று தவெகவை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரபல Liberty Tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவின் போது தமிழகத்தின் பொருளாதாரம் 13 லட்சம் கோடியாக இருந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்தபோது அது 19.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதாவது, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழக பொருளாதாரம் சுமார் 6 லட்சம் கோடி அளவுக்குக் கூடி இருந்தது.

பிம்பிளிக்கா பிளாப்பி வெள்ளை அறிக்கை
ஆனால் மு.க.ஸ்டாலினின் ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஸ்டாலினின் ஆட்சியில் பொருளாதாரம் கிட்டத்தட்ட 16 லட்சம் கோடி அளவுக்குக் கூட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா அவர்கள் பொருளாதாரத்தை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கினார், எடப்பாடி பழனிசாமி 6 லட்சம் கோடி கூட்டினார், ஆனால் ஸ்டாலின் அரசு 16 லட்சம் கோடி கூட்டியுள்ளது. இந்த விபரங்கள் எதுவும் தவெக வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இல்லை.
திமுக அரசால் செய்ய முடிந்த ஒரு விஷயத்தை ஏன் தவெக அரசால் செய்ய முடியவில்லை? தவெக அரசு தற்போது வெளியிட்டுள்ள பட்ஜெட் மற்றும் வெள்ளை அறிக்கை வெறும் ஏமாற்று வேலை, இது ஒரு பிம்பிளிக்கா பிளாப்பி வெள்ளை அறிக்கை.
பொன்ராஜ் கேள்வி
தேர்தலுக்கு முன்பு "100 சதவீதம் விஜய்யை நம்புங்கள், நான் பொய் சொல்ல மாட்டேன், ஏமாற்ற மாட்டேன், எது சாத்தியமோ அதை மட்டும்தான் சொல்வேன்" என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.
அப்படியென்றால் ஆட்சிக்கு வந்த உடனே அதைச் செய்ய வேண்டியதுதானே, ஏன் செய்யவில்லை? இத்தனை லட்சம் கோடி கடன் இருக்கிறது என்பது இன்றைக்குத்தான் தெரியுமா? நிதி அடிப்படையில் சாத்தியமற்ற ஒரு திட்டத்தை விஜய் கொடுத்துள்ளார். விஜய் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தவே கூடுதலாக வருடத்திற்கு 3.91 லட்சம் கோடி தேவைப்படும் என்பதால் இது சாத்தியமற்றது.
இந்த நிதி நிலவரத்தைச் சுட்டிக்காட்டி, தவெக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்று 5 ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்ந்தால், தமிழகத்தின் கடன் 20 லட்சம் கோடியாக உயரும் என்றும், அப்படி இல்லையென்றால் தனது பதவியையே ராஜினாமா செய்யத் தயார் என்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார். தங்கம் தென்னரசு விடுத்த சவால் முற்றிலும் உண்மைதான்.
ஸ்டாலின், விஜய் டெல்லி மீட்டிங்
நான் தவெக அரசுக்கும், இதற்கு முன் இருந்த அரசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. 2 முறை டெல்லி போயிட்டு வந்திருக்கிறார் முதல்வர் விஜய். மோடியோட தேனீர் விருந்து, இரவு விருந்துல கலந்துட்டு வந்திருந்தார். இப்ப ஆளுனர் உரை வந்து சுமூகமாக நடைபெற்றிருக்கு. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஒரு இணக்கத்தோடு தவெக அரசு போகுது.
ஸ்டாலின் நிதி ஆயோக் மீட்டிங்ல கலந்துகிட்டு பிரதமரோட போட்டோ எடுத்தார். அதை வந்து இவர் என்ன சொன்னார்? திமுக பிஜேபியோட இன்டைரக்ட் டீலிங் வச்சிருக்காங்கன்னு சொன்னார். இப்ப தவெக இன்டைரக்ட் டீலிங் வச்சிருக்கா?
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தி பேசியிருக்கிறார். பொருளாதாரத்தில் கூடியிருக்கு, கல்வியில், சுகாதாரத்தில், மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னணியில இருக்கிறது என்றெல்லாம் சொன்னது யாரு? தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எழுதி கொடுத்ததை அப்படியே போய் டெல்லியில் படிச்சிட்டு வந்திருக்காரு. .
அமித்ஷாவின் கருணை கிடைக்குமா
வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்த அரசியல் நிகழ்வுகள் எல்லாம் எதிரொலிக்குமா என்றால், அமித்ஷாவின் கருணை இருந்தால் மட்டுமே எதிரொலிக்கும். அமித்ஷா அவர்களின் கருணை எப்படி இருக்கும்? காங்கிரஸைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அமித்ஷாவின் கருணை உங்களுக்குக் கிடைக்குமா? தேர்தலில் நின்று பாருங்கள், வெற்றி பெற்றுப் பாருங்கள், யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை மக்கள் வாக்குகளின் மூலம் காட்டுவார்கள்.
அமித்ஷா எந்தத் தலையீடும் செய்யாமல் அமைதியாக விட்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம்.
அமித்ஷாவின் கருணை தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்தில் சமரசம் செய்திருக்கிறார்கள், வந்தே மாதரம் பாடலையும் பாடியிருக்கிறார்கள். முதலிலேயே அமித்ஷா அவர்களின் கருணையைப் பெற வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் தங்களது கொள்கை எதிரியான பாஜகவுடன் ஒரு மறைமுக உடன்பாடு (Underground Dealing) வைத்துக் கொண்டு, நாங்கள் இணக்கமாகச் செல்கிறோம் என்று தவெக அரசு நாடகமாடுகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications