தமிழக அரசு ஊழியர்களே.. 3வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு உண்டா? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை மற்றும் சேலம் ஆசிரியை ஆகியோர், மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதனை 2016 ஆம் ஆண்டு திருத்திய மத்திய அரசு மகப்பேறு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. அதற்குப் பிறகும் உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த சலுகைகளை அனைத்தும் முதல் 2 குழந்தைகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி உரிமை தாய் என அழைக்கப்படும் வாடகை தாய், மற்றும் குழந்தைகளை தத்தெடுப்போருக்கும் இந்த சலுகைகள் பொருந்தும். பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பு சார்ந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், சுரங்க பணியாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
மகப்பேறு கால விடுப்புக்கு விண்ணப்பிக்கும் மகளிர் 12 மாதங்களுக்கு முன்பு எந்த தேதியில் நிறுவனத்தின் சேர்ந்திருந்தாலும், மகப்பேறு கால விடுப்பு எடுக்க மகளிருக்கு உரிமை உண்டு. மகப்பேறு கால சலுகைகளை பெறுவதற்கு, வேலை செய்யும் நிறுவனத்தில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 80 வேலை நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 80 சேவை நாட்களாவது இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து 2016ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், 3வது பிரசவத்திற்காக பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்பதால், 3வது பிரசவத்துக்கு வழங்கப்படவில்லை.
இதை எதிர்த்து ஈரோடு ஆசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன் திருணமாகி, 2 குழந்தைகளை பெற்ற நிலையில் கணவர் இறந்து விட்டதால், மறுமணம் செய்தார். அதன் பின் கருவுற்ற அவருக்கு கடந்த ஆண்டு இரட்டைக்குழந்தைகள் பிறந்ததால் பேறுகால விடுப்பு கேட்டு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிர், தமிழக அரசின் அரசாணைப்படி, 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுமுறை வழங்கப்படும் என்பதால், 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், இரு குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்ற அரசு கொள்கை முடிவை மீறி, 3 வது பிரசவத்துக்கு விடுப்பு கோர முடியாது . மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்
இதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையும் 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரிய வழக்கையும் நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்தார். இதன் மூலம் மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications