தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி.. ஆனால், அமைதியாக நடத்தனும்.. நிபந்தனையுடன் ஹைகோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 Madras high court granted permission for RSS rally in 33 places across tamilnadu

மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் மற்றும் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர்.

ஆஎஸ்எஸ் பேரணி: அவர்கள் தங்களது வாதத்தில், அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை எனவும் பேரணிக்கு ஆர்.எஸ். எஸ். அனுமதி கோரிய அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கோரும் வழித்தடத்தில் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதாகவும் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் அகண்ட பாரதம் கட்டமைப்போம் எனக் கூறியுள்ளதாகவும் அந்த வரைபடத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

உளவுத் துறை எச்சரிக்கை: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அதனால் அரசுக்கு என்ன பிரச்சினை? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், இது மிகவும் முக்கியமான விவகாரம் எனவும் இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார். பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும், இந்த பேரணியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபால், எம்.எல்.ராஜா மற்றும் கார்த்திகேயன் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில், கடந்த முறை பேரணிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அப்படி வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு எனத் தெரிவித்தனர்.

அகண்ட பாரதம்: தற்போதைய வாதத்தையே கடந்த முறையும் காவல்துறை முன் வைத்ததாகவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டுப்பாடுகளுடன் தான் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளாக ஆர்.எஸ்.எஸ். சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை அரசு கூறி வருவதாகவும் அகண்ட பாரதம் அமைப்பது என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை எனக் கூறப்பட்டது.

அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையை எந்த காரணமும் இன்றி மறுக்கக்கூடாது எனவும் ஜாதகத்தைத் தவிர அனைத்து தகவல்களும் போலீசால் கேட்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.

இதனையடுத்து, ஆர்.எஸ். எஸ். அமைப்பிடம் கேட்கப்பட்டுள்ள கேள்வியைப் போலவே அனுமதி கோரும் அனைத்து அமைப்பிடமும் கேட்கப்படுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டம், பேரணி உள்ளிட்டவைகளுக்கு யார் அனுமதி கோரினாலும் இதே போலக் கேள்விகள் கேட்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள், தங்களிடம் தான் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படுவதாகக் கூறினர்.

அனுமதி: இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீசார் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து மாவட்ட நிர்வாகம் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் எனக் கூறிய நீதிபதி, சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழித்தடங்கள்: மேலும், 22ம் தேதி அணிவகுப்புக்கான வழித்தடத்தை 20ம் தேதிக்குள்ளும், 29ம் தேதி பேரணிக்கான வழித்தடத்தை ஐந்து நாட்களுக்கு முன்னதாக இறுதி செய்யப்பட வேண்டுமென கூறியுள்ள நீதிபதி, வழித்தடத்தில் ஏதேனும் மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கூறினால் அது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பேரணி தொடங்கும் இடம் மற்றும் நிறைவடையும் இடம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார். அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்குத் தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி, அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டுமெனவும், அணிவகுப்புக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+