தி.மலை 2016 சம்பவம்.. குடும்பத்தையே கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்.. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த தாய், தந்தை மகனை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜுலை மாதம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள கடை வீதியில் நகை வாங்குவதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும் அவரது மனைவி, மகன் ஆகியோரும் வந்தார்கள்.அப்போது மனைவி தாமதமாக வந்ததால், அவருடன் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், அவரை கன்னத்தில் அறைந்தார். அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுள்ளார்கள்.

அப்போது அங்கு வந்த மூன்று காவலவர்கள் அது குறித்து கேட்டார்கள். காவலர்களிடம் ராஜா, இது தங்கள் குடும்ப விவகாரம் என்று பதிலளித்துளளார். இதனால் கோபம் அடைந்த மூன்று காவலர்களும் அவர்களை சாலையிலேயே கடுமையாக தாக்கத் தொடங்கினர். அவர்கள் பயன்படுத்திய லத்தி உடையும்வரை மூன்று பேரையும் தாக்கினார்கள். இது குறித்து சாலையில் நின்றவர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்களையும் காவல்துறையினர் விரட்டியடித்தார்கள்.
இதற்குப் பிறகு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தாங்கள், அங்கும் தாக்கப்பட்டதாக ராஜா குற்றம்சாட்டினர். இதனிடையே காவலர்கள் ராஜா மற்றும் குடும்பத்தினரை தாக்கும் வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் பரப்பப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மூன்று பேரும் 2016ம் ஆண்டு ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள்
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில் 2016ம் ஆண்டு ராஜா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கிய 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா, ரூ.50000 வழங்கவும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications