நீதிபதி குறித்த அவதூறு பேச்சு.. மன்னிப்பு கேட்ட பத்ரி சேஷாத்ரி.. வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்
சென்னை: மணிப்பூர் சம்பவத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த மணிப்பூரும் பற்றி எரிந்தது. அப்போது அங்கே மிக மோசமான சம்பவங்கள் அரங்கேறின. அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர வைத்தது.

இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு மணிப்பூர் வன்முறை குறித்துப் பேசியிருந்தார். அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் இந்த புகாரை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பத்ரி சேஷாத்திரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த ஜூலை 30ஆம் தேதி காலை அவரை கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு முன்பே ஜாமீனும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பத்ரி சேஷாத்ரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது பத்ரி சேஷாத்ரி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையில் தான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பத்ரி சேஷாத்ரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. பத்ரி சேஷாத்ரி மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
