மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை.. மனைவி, குழந்தைகளுக்குதான் உரிமை- சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கில்லை என்றும் மனைவி, குழந்தைகளுக்கு தான் சொத்தில் பங்கிருக்கிறது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கணவன் சொத்தில் மனைவிக்கும், பிள்ளைகளுக்குமே சொத்தில் பங்குண்டு என்பதை சென்னை உயர்நீதிமன்றம் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம்: நாகையை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவரின் தாய் பவுலின் இருதய மேரி தனது மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை மாவட்ட நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு: இந்த தீர்ப்பை எதிர்த்து இறந்த மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமணமான மகன் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான தேவையே எழவில்லை என்றும் உயிரிழந்த மோசஸின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது எனவும் தீர்ப்பளித்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு: மேலும், மோசஸின் தாய்க்கு பங்கு உண்டு என்ற நாகை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி தேசியளவிலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு கவனம் ஈர்த்துள்ளது. மாமியார், மருமகள் இடையேயான சொத்து வழக்குகளுக்கு முன் மாதிரி தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
அடுத்தது உச்சநீதிமன்றம்: இதனிடையே மோசஸின் தாயார் பவுலின் இருதய மேரி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்துப் போன மகன் சொத்துக்காக தாயும், கணவன் சொத்துக்காக மனைவியும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கவனம் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications