தேசதுரோகிகள்.. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை ராணுவம் மூலம் வெளியேற்றுவோம்.. எச்சரித்த சென்னை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் இந்த நாட்டின் தேசத் துரோகிகள் என்றும், ஆக்கிரமிப்பாளர்களை ராணுவத்தை கொண்டு அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என்றும் தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சேகர் என்பவர் 2021-இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் தொடர்ந்தார்.

Madras High Court has warned the Tamil Nadu government over Pallikaranai Marshland Encroach

இந்த வழக்கானது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஆயிரத்து 87 ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம்.

அதன்படி, 149 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, மறு குடியமர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தமிழக அரசின் இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக இடம் ஒதுக்குவது ஆக்கிரமிப்பாளர்களை மேலும் ஊக்கப்படுத்தவே செய்யும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்டாமல் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தாமல் ஊக்கப்படுத்தினால், 2019-ஆம் ஆண்டு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின்படி, ராணுவத்தினர் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும்" என்று எச்சரித்தனர்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நாட்டின் துரோகிகள் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த வழக்கை போல் ஏற்கனவே ஒரு வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கீழ்கட்டளையைச் சேர்ந்த பாதம் சந்த் ஜெயின், சுனிதா ஜெயின், நீரஜ் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், பல்லாவரம் தாலுாவில் உள்ள கீழ்கட்டளையில் எம்.கே.நகர் 1-வது தெருவில் எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடம் ரயத்துவாரி புஞ்சை என கிராம பதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் எங்களது இடம் வருவாய் துறை ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகவே நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க முடியாது எனக்கூறி கடந்த பிப்.6-ம் தேதி உத்தரவிட்டுள்ளனர். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எங்களது நிலத்தை வீ்ட்டுமனைப் பகுதியாக மாற்ற உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பி்ல் வழக்கறிஞர் இ.சுந்தரம் ஆஜராகி, மனுதாரர்கள் வசம் உள்ள இடத்தை ஆய்வு செய்தபோது அந்த நிலம் ஏரிஉலுவை என வகைப்படுத்தப்பட்ட நீர்நிலைப் பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க இயலாது, என்றார். அதற்கு மனுதாரர்கள் தரப்பில் நீர்நிலையின் அருகில் தங்களது நிலம் இருப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதி என அதிகாரிகள் தரப்பி்ல் கூறுவதாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், வருவாய் துறை அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் கண்டறிந்து வரையறை செய்ய வேண்டும். வீட்டு மனைகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு சென்று விட்டதால் பேராசைக்காரர்கள் தங்களது சுயநலனுக்காக நீர்நிலைகளையும் விட்டு வைப்பதில்லை. அரசு நிலங்களை சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலமாக மாற்றி சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர்.

எனவே அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளும் எவ்வித விசாரணையுமின்றி அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தடையில்லா சான்று கொடுத்து விடுகின்றனர்.

இந்த நடைமுறை ஏற்புடையதல்ல. மனுதாரர் இந்த நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறுவதற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால், மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை அளிக்க முடியாது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த நிலத்தை ஆய்வு செய்து நீ்ர்நிலையாக இருந்தால் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+