பல வருடம் இருந்தாலும்.. கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தென்காசி அருகே கடையநல்லூர் அருள்மிகு அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வாடகையை வசூலிக்க வேண்டும். வாடகை தர எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அருள்மிகு அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் வாடகைதாரர்கள், வாடகை தராத நிலையில் அவர்களை அப்புறப்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி அருகே கடையநல்லூரில் உள்ள அருள்மிகு அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தென்காசியை சேர்ந்த உடுமன் மொஹிதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கடையநல்லூர் அருள்மிகு அண்ணாமலை நாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து. அதன்படி அந்த இடத்தை கடந்த 1995 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் தன்னிச்சையாக இடம் விற்பனை செய்யப்பட்டதாக 1997ஆம் ஆண்டு நில விற்பனை உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ரத்து செய்து உத்தரவிட்டார். தன்னிச்சையாக விற்பனை செய்யப்பட்ட கோயில் நிலத்தை யாரும் உரிமை கோர முடியாது என தென்காசி மாவட்ட நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கோயில் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 81 ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. ஆனால், கோவில் இடத்திற்கு வாடகை தர முடியாது என ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்," என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள், ஆர். சுரேஷ்குமார், மரியா கிளாடி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், "கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்த அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை 58 பேர் ஏற்றுக் கொண்டனர். 23 பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,"என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், "கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வாடகையை வசூலிக்க வேண்டும். வாடகை தர எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும்." என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications