இளையராஜா வழக்கு! டியூட் படத்தில் இருந்து "கருத்த மச்சான்", "100 வருஷம்" பாடல்களை நீக்க உத்தரவு!
சென்னை: "டியூட்" படத்தில் "கருத்த மச்சான்.." பாடலை நீக்கக் கோரி இளையராஜா தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், அந்த பாடலை உடனடியாக நீக்குமாறு பட நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தீபாவளிக்கு டியூட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் "புது நெல்லு புது நாத்து" திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கருத்த மச்சான் பாடல், பணக்காரன் படத்தில் "100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்" பாடல் ஆகிய இரு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த படம் வெளியாகி இளைஞர்களை கவர்ந்து வந்த நிலையில் தனது அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், "படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும். தனது இசையில் அமைந்த பாடல்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாடலை உருமாற்றி இருக்கிறார்கள். பாடலுக்கான உரிமை தங்களிடம் இருக்கிறது. எக்கோ (ECHO) நிறுவனம், தனது பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டிருந்தார்.
டியூட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும் சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது மக்கள் ரசித்து கேட்கிறார்கள். இதனால் இளையராஜா எந்த வகையில் பாதிக்கப்படுகிறார், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது டிரென்டாகி வருகிறது.
படம் திரையரங்கிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன் என இளையராஜா தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பி, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த மனு மீது இன்று நீதிபதி உத்தரவு வழங்கினார். அதில் "படத்தில் பாடல்கள் உருமாற்றம் செய்வதால் இளையராஜாவின் புனிதத்தன்மை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே டியூட் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும்" என உத்தரவிட்டார். அப்போது பட தயாரிப்பு நிறுவனம், "பாடல்களை நீக்க 7 நாட்கள் கால அவசாகம்" வழங்குமாறு கோரியது. இதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். இளையராஜாவின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications