“சம்பவ இடத்திலேயே அமைச்சர் பெரியகருப்பன் இல்லைங்க”.. வாதத்தை ஏற்று வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்!
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டமங்கலம் அருகே திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி வாதிட்டார்.
மோதல் சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இல்லை என்றும் வேறொரு இடத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்
என்றும் சம்பவத்திற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கேஆர் பெரியகருப்பன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக நான்காவது முறையாக எம்.எல்.ஏவாக உள்ளார். 2021 மே மாதம் பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் கே.ஆர்.பெரியகருப்பன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதன் பிறகு, ஐ.பெரியசாமியிடம் இந்தத் துறை ஒப்படைக்கப்பட்டு, அவர் வசம் இருந்த கூட்டுறவுத்துறை கேஆர் பெரியகருப்பனுக்கு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications