சாமிக்கு ஓட்டு இல்லை என்பதால் மீட்கவில்லையா? கோவில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் நீதிமன்ற அதிரடி!
மதுரை: கோயில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை உரிமையியல் நீதிமன்றங்கள் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணையிம் போது, சாமிக்கு ஓட்டு இல்லை என்பதால் கோயில் சொத்துகளை மீட்கவில்லையா?., ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டு உள்ளதால் நடவடிக்கை எடுக்க தயக்கமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டனர்.
கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 507.88 ஏக்கர் நிலத்தை மீட்கும் உத்தரவை 6 ஆண்டுகளாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஏ.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு," கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட போது அதை இனாம் நில விவசாயிகள் குத்தகைதாரர்கள், வீட்டு மனை உரிமையாளர்கள் பாதுகாப்பு இயக்கம் போன்ற சில அமைப்புகள் போராட்டம் நடத்தி தடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்வுகாண பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. சட்டத்துக்கு புறம்பான செயல்களால் நீதிமன்ற உத்தரவை தடுக்க முடியாது. இப்போராட்டத்தில் வழக்கறிஞர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்களும் பங்கேற்றிருப்பது வருத்தமானது. ஆக்கிரமிப்புகளை எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை. இருப்பினும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கோயில் நிலங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் உரிமையியல் நீதிமன்றங்கள், அவற்றை முடிந்தவரை விரைவாக, முன்னுரிமை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலங்கள், மீட்பு நடவடிக்கைகள், வழக்குகள், வழக்கின் நிலை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
வெண்ணெய்மலை கோயில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை கரூர் எஸ்பி உறுதி செய்ய வேண்டும். கோயில் ஆக்கிரமிப்பு மீட்புக்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சங்கங்களின் பதிவாளர் விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
