அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ.. தமிழக அரசின் எஸ்ஓபி-யில் என்ன தவறு? தவெகவுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: அரசியல் கட்சிகளுக்கான ரோடு ஷோவுக்கான எஸ்ஒபி தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரும்பாலான அரசியல் கட்சிகள் நெறிமுறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்றும், சேலத்தில் வெயிலால் ஒருவர் இறந்தபிறகு தான் வேலூரில் மேற்கூரை அமைத்துள்ளனர் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன என தவெக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழக அரசின் எஸ்ஓபி-யில் என்ன தவறு? உள்ளது என தவெகவுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.

ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து ரோடு ஷோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, அரசியல் கட்சிகளிடம் கருத்துகளை பெற்று ரோடு ஷோக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தவெக நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து கடந்த மாதம் 5 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்கள் கேட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தது. இந்த நிலையில் தமிழக அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தவெக நிர்மல் குமார் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக சார்பில், பொதுக்கூட்டங்களுக்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தன்னிச்சையான விதி என்றும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது என்றும் வாதிடப்பட்டது.
அரசு விதிகளில் என்ன தவறு உள்ளது?
மேலும் நிகழ்ச்சியின் பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் எல்லாம் கட்சிகள் மீது திணிக்கப்படுவதாகவும் கூறினர். இதனை கேட்ட நீதிபதிகள், "அரசு வழங்கிய விதிமுறைகளில் என்ன தவறு உள்ளது.. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்திற்கு பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
வருமான வரி விலக்கு பெறுவதற்காக சில கட்சிகள் காளாண்கள் போல துவங்கப்பட்டு இருப்பதாகவும், அந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், இதனால் பல எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது" என்றும் கேள்வி எழுப்பினர்.
தவெகவுக்கு சரமாரி கேள்வி
மேலும் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தேர்தலில் போட்டியிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமில்லை எனவும், அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்" என்று வாதிடப்பட்டது.
மேலும் அரசு தரப்பில், "சேலத்தில் வெயிலால் ஒருவர் இறந்தபிறகு தான் வேலூரில் மேற்கூரை அமைத்துள்ளனர். 5 ஆயிரத்திற்கு மேல் பங்கேற்கும் கூட்டத்திற்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், 4998 பேருக்கு மட்டுமே அனுமதி கேட்டு தவெக விண்ணப்பம் அளிக்கிறது. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பல அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதி கேட்கும் போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. இல்லாவிட்டால் முதலில் வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
3 வாரத்தில் தமிழக அரசு பதில் தரனும்
கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் எல்லா கட்சிகளுக்கும் ஒரே மாதிரி தான் அனுமதி அளிக்கப்படுகிறது. கட்சி பாகுபாடு பார்க்கப்படவில்லை" என்று விளக்கம் அளித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தவெக தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications