பாம் சரவணன் மனைவி போட்ட கேஸ்.. காலில் என்னாச்சு? போலீஸ் தரப்பு சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தனது கணவரை போலீசார் சுட்டுப் பிடித்ததாக கூறியுள்ளார். இதில் தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாம் சரவணன் மனைவி மனு
தனது கணவர் காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்ட பின்னரும் ரத்தக்கசிவு உள்ளதாகவும் அதனை சரி செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கோரி கடந்த 18 ஆம் தேதி சிறை நிர்வாகித்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார்.
எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், பாம் சரவணனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
யார் இந்த பாம் சரவணன்?
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). கொலை முயற்சிகளின் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என ரவுடிகளால் அழைக்கப்படுகிறார். பாம் சரவணன் “A ப்ளஸ்” ரவுடிகள் பட்டியலில் இருப்பவர். இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ரௌடி ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன்.
ஸ்கெட்ச்
பாம் சரவணன் தலைமறைவான நிலையில் சென்னை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனது சகோதரர் தென்னரசு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகளுக்கு பழிவாங்க, பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், அதற்காக ஸ்கெட்ச் போட்டுக் காத்திருப்பதாகவும் உளவுப்பிரிவு போலீசார், எச்சரிக்கை விடுத்ததையடுத்து தீவிரமாக தேடி வந்த போலீசார் கடந்த 14 ஆம் தேதி பாம் சரவணனை கைது செய்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி விட்டு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார் பாம் சரவணன். இதையடுத்து அவரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications