கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி!
சென்னை: அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக கடவுளை காத்திருக்க வைக்கக்கூடாது என்றும், விஐபி தரிசனத்திற்காக கோவில் நடைமுறைகளில் தனி நேரம் ஏன் ஒதுக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடவுளின் முன் அனைவரும் சமம். சாமானிய பக்தர்களைப் புறக்கணித்து விட்டு விஐபிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அளிப்பது ஏற்புடையதல்ல. விஐபி வருகையால் கோயிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் நடை சாத்தப்படும் நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படக் கூடாது. விஐபிகளுக்கு என்று தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கினால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது என ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மே 15 ஆம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோயில் நடை மதியம் 12.45 மணிக்கு சாத்தப்படும். ஆனால், அமைச்சருக்காக கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் தரிசனத்திற்கு பிறகே கோயில் நடை சாத்தப்பட்டது.
அதேபோல் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அறநிலையத்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், கோயில் நடை அடைக்கும் முன்பே அமைச்சர் கோயிலுக்குள் நுழைந்து விட்டார் என்றும், அவரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. இதற்கு கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; தமிழ்நாட்டு கோயில்களில் விஐபி தரிசனத்துக்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications