"பம்பரம்" சின்னம்.. இதுதான் மதிமுக பிளான்.. உடனே ஐகோர்ட்டிற்கு சென்ற வைகோ.. அடுத்து என்ன! பரபர தகவல்
சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக இடம்பெற்றுள்ளது.
மதிமுக கூட்டணி: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார். எனவே, இந்த முறை மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா என்பதில் கேள்வி இருந்தது. இதற்கிடையே மதிமுக இந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும் இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ: கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தைக் கோரவில்லை என்பதாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவைப் பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் வைகோ சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி முறையீடு செய்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications