பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தவே கூடாது- ஹைகோர்ட் வார்னிங்
சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தவே கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அது போல் இந்த வழக்குகளை கவனமாக கையாளவும் அறிவுரை வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றிருந்தன.
இதை பார்த்த நீதிபதி, "பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை" என அதிருப்தியை தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும். இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தவே கூடாது என காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை டிஜிபியும், சென்னை மாநகர காவல் துறை கமிஷனரும் அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி, "இதை மீறினால் ஒட்டுமொத்த காவல் துறையினரும் அதற்கு பொறுப்பாவார்கள். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்ணின் விவரங்களை நீக்க வேண்டும்" என கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் ஏற்கெனவே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
பொதுவாகவே பாலியல் குற்றங்களின் போது பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் புகைப்படங்கள், பெயர், அவர்களது சுய விவரங்கள் வெளியிடக் கூடாது. அது அவர்களது வருங்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதால் இது போன்ற அறிவுரை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications