முதலமைச்சரின் பிரதிநிதியாக பசும்பொன் செல்லும் துரைமுருகன்! உதயநிதியை எதிர்பார்த்த கட்சியினர்!
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக, தனக்கு பதில் மூத்த அமைச்சரான துரைமுருகனை பசும்பொன் அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதுகுவலி காரணமாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வருகை தருவார் என்று எதிர்பார்த்த மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முத்துராமலிங்கத் தேவர்
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நாளை பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தார்.

அமைச்சர்கள்
இதற்காக இன்று மாலையே விமானம் மூலம் மதுரை சென்று தங்கவும் முதல்வர் திட்டமிட்டிருந்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட கடும் முதுகு வலியால் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்றும் ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தனக்கு பதில் தனது பிரதிநிதிகளாக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்
இதனிடையே என்னதான் அமைச்சர் துரைமுருகன் பசும்பொன் சென்றாலும் கூட, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலினின் வருகையை தான் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அமைச்சர்களின் பசும்பொன் வருகையை காட்டிலும் உதயநிதி ஸ்டாலினின் வருகை கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும், நாளை கள்ளக்குறிச்சியிலும் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருப்பது கவனிக்கத்தக்கது.

கள்ளக்குறிச்சி நிகழ்ச்சி
ஏற்கனவே திட்டமிடப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கு தேதி கொடுக்கப்பட்டதால் அதில் மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications