Onam special trains: மதுரை, திருச்சி, சேலம் வழியாக சென்னையில் இருந்து ஓணம் ஸ்பெஷல் ரயில்கள்! நாளை முதல் இயக்கம்
சென்னை: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக மதுரை, திருச்சி, சேலம் வழியாக சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழும்பூர் டூ மங்களூர், சென்னை செண்ட்ரல் - கொல்லம், தாம்பரம் - திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மொத்தம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஒணம் பண்டிகையின் போது கேரள மக்கள் வீடுகளில் அத்தப்பூ கோலம் பொட்டு, இனிப்பு பலகாரங்கள் செய்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

கேரளா ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதனால் சென்னையில் இருந்து கேரள நகரங்களுக்கு செல்லும் ரயில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
ரயில்களிலும் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகியுள்ள நிலையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ஓணம் பண்டிகை கொண்டாட செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் விவரம் வருமாறு:-
எழும்பூர் டூ மங்களூர் சிறப்பு ரயில்:
* மங்களூர் - சென்னை எழும்பூர் (வண்டி எண் - 06126) - ஜூலை 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 (திங்கட்கிழமைகளில் மட்டும்) இயக்கப்படும். இந்த ரயில் மங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்
* மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருக்கு ஜூலை 21, 28 மற்றும் ஆகஸ்ட் 04, 11, 18, 25, செப்டம்பர் 01 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில் (06125) சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 8.40 மணிக்கு மங்களூர் சென்றடையும்.
சென்னை செண்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்:
* சென்னை செண்ட்ரல் - கொல்லம் (06119) ரயில் ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லம் செல்லும்.
* மறு மார்க்கத்தில் கொல்லம் - சென்னை செண்டிரல் இடையே ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில் (06120) கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தடையும்
தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்:
* தாம்பரம் - திருவனந்தபுரம் (06110) ரயில் ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 10 மணிக்கு வந்தடையும். புதன்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.
* மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய நாட்களில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருவனந்தபுரத்திற்கு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்றடையும். வியாழக்கிழமை தோறும் இந்த ரயில் இயக்கப்படும்.
நின்று செல்லும் இடங்கள்:
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புனலூர், அவுனேஷ்வரம், கொட்டராக்கரா, கொல்லம் வழியாக திருவனந்தபுரம் செல்லும்.


Click it and Unblock the Notifications
