ராணிப்பேட்டையில் ஸ்வீட் எடு கொண்டாடு.. திருப்பரங்குன்றம் தீப அனுமதியால் வெற்றிவேல் முழக்கம்!
ராணிப்பேட்டை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் நவம்பர் 24, 2026 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தீபம்
அரசின் பாதுகாப்புடன் இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தேவஸ்தான வாரியத்தால் தேர்வு செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்குத் தேவையான பாதுகாப்பை மதுரை காவல் ஆணையர் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் சிஆர்பிஎஃப் படையினரின் உதவியையும் நாடலாம். தீபம் ஏற்றியதை உறுதி செய்து மாவட்ட ஆட்சியர் 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 6 வார கால அவகாசமும் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டை கொண்டாட்டம்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினரும் முருக பக்தர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்து முன்னணி கோட்டத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் பலர் பேருந்து நிலையத்தில் திரண்டனர். அங்கு இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
வெற்றிவேல்! வீரவேல்
தொடர்ந்து, "வெற்றிவேல்! வீரவேல்!" என்று முருகப்பெருமானின் பக்தி முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர். திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையுடனான அனுமதியை வரவேற்று இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, வரும் நவம்பர் 24-ம் தேதி ஒருநாள் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மலை உச்சிக்கு செல்ல அனுமதி இல்லை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளியானதை தொடர்ந்து வாலாஜாபேட்டையில் இந்து முன்னணியினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.




Click it and Unblock the Notifications
