விஎஸ் பாபு இறுதி ஊர்வலம்.. உடலை சுமந்து சென்று மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.. சோகத்தில் தவெக!
சென்னை: கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலகத்தில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரை விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். செப்டம்பர் 9ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபு, 72 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பின் எந்தவொரு மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

நேற்று முன்தினம் விஎஸ் பாபு உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நேற்று விஎஸ் பாபு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விஎஸ் பாபுவின் மறைவு தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் பல்வேறு கட்சிகள் சார்பாக நிர்வாகிகள் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தினர். இந்த நிலையில் விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொடங்கியது.
அப்போது விஎஸ் பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் இறுதி மரியாதையை செலுத்தினார். தொடர்ந்து விஎஸ் பாபுவின் உடலை சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி சுமந்து சென்ற விஜய், பின்னர் வாகனத்தில் ஏற்றினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் உடனிருந்தனர். அதேபோல் சென்னை தவெக எம்எல்ஏ-க்களும் உடன் இருந்தனர்.
விஎஸ் பாபுவின் உடல் திருவிக நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. விஎஸ் பாபுவின் மறைவையொட்டி தவெகவின் கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விஎஸ் பாபு இறுதி ஊர்வலகத்தில் விஜய் பங்கேற்று உடலை சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
