உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்.. ஆதவ் அர்ஜுனா வீசிய "டெல்லி" அஸ்திரம்! கம்யூனிஸ்டுகள் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு திமுகவும் அதிமுகவும் நெருக்கடி கொடுக்கத் திட்டமிடுவதாக முதல்வர் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளதாம். இந்தச் சூழலில், ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளிடம் விஜய் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இதற்காக டெல்லியில் ஆதவ் அர்ஜுனா நடத்திய பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? இடதுசாரி தேசியத் தலைவர்கள் சொன்ன பதில் என்ன? நம்மிடம் கிடைத்துள்ள பிரத்யேக தகவல்களை இங்கே பார்க்கலாம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்பாகவே ஆலோசனை கூட்டம் விஜய் தலைமையில் நடந்துள்ளது..

விஜய் தலைமையில் ஆலோசனை
இதில், ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, தனிச்செயலாளர் ஜெகதீஸ், அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடதுசாரி கட்சிகளின் தேசியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படிதான், விஜய்க்கு முன்பே ஆதவ் அர்ஜுனா டெல்லிக்குச் சென்று தேசியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இடதுசாரி தலைவர்களிடம் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "தவெக ஆட்சிக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் முரண்பட்ட ஒரு கூட்டணியை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆட்சியை கவிழ்ப்பதுதான் அவர்களின் திட்டம். இதைப்பற்றி, உறுதியான ரிப்போர்ட்டை தமிழக உளவுத்துறை முதல்வர் விஜய்யிடம் கொடுத்துள்ளது.
அதிமுக - திமுக
திமுக-அதிமுகவின் மறைமுக திட்டத்துக்கு ஒத்துழைப்பது போல, உங்களின் தமிழக தலைவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன. அதே தொணியில், பத்திரிகைகளுக்கும் பேட்டியளிக்கிறார்கள். அத்தகைய பேட்டிகள், தவெக அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவு சர்ச்சையாகிறது. அதனால், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதை குறைத்துக்கொள்ள, உங்களின் தமிழக மாநில செயலாளர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். முதல்வர் விஜய்யின் விருப்பம் இது.
தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை நீங்கள் ஆதரிக்கக் கூடாது. ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய் விரும்புகிறார்" என்றெல்லாம் இடதுசாரிகட்சிகளின் தேசிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
இடதுசாரிகள் தந்த பதில்
இதைக்கேட்ட இடதுசாரிகளின் தேசிய தலைவர்களும், "அப்படி ஒரு சூழல் தமிழக சட்டமன்றத்தில் வரும்போது எங்கள் கட்சியின் பொலீட் பீரோவில் விவாதிக்கிறோம்" என்று நம்பிக்கை கொடுத்து ஆதவ்வை அனுப்பி வைத்திருக்கிறார்கள்" என்று டெல்லி சந்திப்பில் நடந்ததை நம்மிடம் விவரிக்கிறார்கள் தவெகவின் முக்கியஸ்தர்கள்.
இந்த நிலையில், தங்களிடம் விவாதிக்காமல் தங்களின் தேசியத் தலைவர்களோடு விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதில் தமிழக இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகளிடம் அதிர்ப்தி உருவாகியிருப்பதாக 2 கட்சிகளின் தோழர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் எழில்



Click it and Unblock the Notifications
