மூர்த்தி ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது உங்களுக்கு தெரியும்.. மதுரையில் கனிமொழி ஆவேசம்
மதுரை: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு குறித்து மதுரையில் பேசிய கனிமொழி எம்பி, எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக. இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக்கூடியவர்கள் அல்ல. சோதனை என்ற பெயரில் திரும்பத் திரும்ப பொய் வழக்குகள் போட்டு அவர்களை அச்சுறுத்திவிடலாம், அவர்களை விமர்சிக்காமல் நிறுத்திவிடலாம் என்ற நினைப்பில் திரும்பத் திரும்ப இதையே செய்து கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி. கனிமொழி வருகை தந்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து கனிமொழி விழா மேடையில் பேசும்போது, " மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி அவர்கள் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது உங்களுக்கு தெரியும்.

திமுகவை மிரட்டலாம் என கனவு
இப்போது இருக்கும் அரசு திமுகவை மிரட்டிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை வழக்குகள், எத்தனை ரெய்டு என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படாத இயக்கம் திமுக. எதையும் எதிர்கொண்டு எத்தனையோ கடந்து வந்திருக்கிறோம். அதனால் இதையும் நாங்கள் திட்டமிட்டபடி கடந்து போவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சொந்த காலில் மக்கள்
இந்தியாவில் பெண்கள் 42 சதவீதம் வேலை செய்யும் நாடாக தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் தளபதி ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம்தான். யாரும் தாய்மாமன் சீர் கொடுக்கத் தேவையில்லை, தங்க மோதிரம் கொடுக்கத் தேவையில்லை. பெண்களை படிக்க வைக்கக்கூடியவர்களாக, சொந்தக் காலில் இருக்கக்கூடியவர்களாக உறுதி செய்வதுதான் அரசியல் கடமை. அவர்கள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என கூறினார்.
பழிவாங்கும் நடவடிக்கை
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கனிமொழி பேசுகையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தை பழிவாங்கக்கூடிய வகையில் எல்லா முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போட்டு, அவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் திரும்பத் திரும்ப பொய் வழக்குகள் போட்டு அவர்களை அச்சுறுத்திவிடலாம், அவர்களை விமர்சிக்காமல் நிறுத்திவிடலாம் என்ற நினைப்பில் திரும்பத் திரும்ப இதையே செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம். இதில் இருக்கக்கூடிய யாரும் பயப்படக்கூடியவர்கள் அல்ல. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று தாண்டி நிற்போம். தவறு நடந்ததற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. பழிவாங்கக்கூடிய வகையில் ரெய்டு நடத்துகிறார்கள்.
போதைப்பொருள்
இவர்கள் பக்கம் பெண்கள் மீதான குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போவது, எத்தனையோ கொலைகள், கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இரண்டு முறை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒன்றில் தவெக நிர்வாகி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். இப்போது 140 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் எதற்கும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.
வாயைத் திறக்காத முதல்வர்
இதில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பல பேர் பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். துணை சபாநாயகரே ஒருவரை தாக்கும் அளவில் சம்பவம் நடைபெறுகிறது. இவ்வளவு நடக்கக்கூடிய இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாயைத் திறக்காமல் நேரடியாக காவல்துறையைத் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரை வேறு யாரும் பார்த்திருக்க முடியாது" கனிமொழி கூறினார்.
இதைவிட மோசமான பதில்
திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றுள்ளது என அமைச்சர்கள் பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, "இதைவிட மோசமான பதில் வேறு எங்கும் பார்க்க முடியாது. முதலீடு வருவதை கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் அதிகம் உள்ளது என பேசலாம். ஆனால் குற்றங்கள் நடைபெற்றது கடந்த ஆட்சியிலும் அதிகம் நடைபெற்றது என பேசுவது தவறு. திமுக ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்ட அப்போதைய முதல்வரை, சாரி கூட சொல்ல வேண்டாம் எனக் கூறிய முதல்வர், சாரி கூட சொல்ல முடியாத ஒரு நிலையில் இருக்கிறார்' என கனிமொழி கூறினார்.




Click it and Unblock the Notifications
