“நான் மண், ஜல்லி எடுக்கவில்லை.. முறைப்படி லீசுக்கு விட்டுள்ளேன்” - முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேட்டி
மதுரை: மதுரையில் முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நான் மண், ஜல்லி, கல் எடுக்கவில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்தததாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகில் சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ.2.32 கோடி மற்றும் ரூ.3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்ற பிரிவுபோலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டுக்கு டிஎஸ்பி பொன்ராம் தலைமையில் போலீசார் சென்றனர், மூர்த்தியிடம் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கான கடிதத்தை வழங்கிவிட்டு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக செம்மண், கற்களை வெட்டி எடுத்த குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாலமேடு பகுதியில் பி.மூர்த்தி கிரஷர் ஜல்லி தொழிற்சாலை நடத்துவதால், அதற்கு சட்டவிரோதமாக கற்கள் கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.
மேலும், அவரது உறவினர்கள் தன்ராஜ், அலங்காநல்லூர் பொன்ராம், பூவந்தி பகுதியில் அவரது மைத்துனர் ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த்தியுள்ளனர். மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடைபெற்ற குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை நிறைவடைந்தது.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனக்கு சொந்தமான சத்திரவெள்ளாளபட்டியில் உள்ள இடத்தில் குவாரி அமைப்பதற்காக மாவட்ட கலெக்டரும், நானும் சேர்ந்து 2019ல் 5 ஆண்டுகள் குத்தகைக்கு ராஜாமணி, ஆனந்த்ராஜ் ஆகியோருக்கு கொடுத்தோம்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு முறையாக 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கல் குவாரிக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் குவாரிக்கான உகந்த கல் கிடைக்கவில்லை என்று 2021ல் ஆனந்த்ராஜ் கைவிடப்பட்டார். அதேபோல் ராஜாமணியும் குவாரிக்கான அந்த கற்கள் வெட்டி எடுக்க பணிகள் மேற்கொண்டார். ஆனால், அந்த இடத்தில் கற்கள் இல்லை. இதனால், அந்த இடத்திற்கு அருகே உள்ள எனது பட்டா இடத்தில் மண் எடுத்திருப்பதாக உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று குத்தகைக்கு விட்டுள்ளேன். மற்றபடி விதிகளை மீறி மண் எடுத்திருப்பது பற்றி எனக்கு தெரியாது என ஆர்.டி.ஓ-விடம் தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளேன். அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து முறையாக நாம் கேட்கும் அளவை அளந்து முறைப்படுத்தி செய்யவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவையும் கடைபிடிக்காமல் தன்னிச்சையாக ஸ்கேன் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எனது பட்டா இடத்தில் அளவுக்கு மீறி மணல், கல் எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம் என அதிகாரிகள் கூறினர். எனது இடத்தில் நான் கல், மண் எடுக்கவில்லை. குத்தகைக்கு 2 பேரிடம் கொடுத்துள்ளோம். அவர்களிடமும் ஆர்.டி.ஓ முறையாக எந்த விசாரணையும் நடத்தவில்லை.
நான் மண், ஜல்லி, கல் எடுக்கவில்லை. என் வீட்டில் நடக்கும் ரெய்டில் உண்மையில்லை. இந்த ரெய்டு விவகாரத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன். குவாரியை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியரிடம் 2019 ஆம் ஆண்டு அனுமதி பெற்றுத்தான் குத்தகைக்கு கொடுத்துள்ளேன். அதுதவிர மற்ற விவகாரங்களில் என்ன நடந்துள்ளது என்று எனக்கு தெரியாது. குவாரியில் இருந்து மண், ஜல்லி, கல் எதுவும் நான் எடுக்கவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
