செஞ்சி சிறுமி மீட்கப்படுகிறாரா? கர்நாடகா இளைஞரிடம் சிபிசிஐடி போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை
பெங்களூர்: செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன சிறுமி ஹேமலதா குறித்து கர்நாடகாவில் உள்ள இளைஞரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமி ஹேமலதாவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் உள்ள மஞ்சுளா என்ற பெண்ணின் உறவினர் ரேணு. இவர் கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி வருகிறாராம். இந்த நிலையில் சிறுமி குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஏற்கெனவே சிறுமி பெங்களூரில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எல்லாம் கிடைத்த நிலையில் தற்போது கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்படும் விசாரணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வடிவேலு- பவானி தம்பதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் திருவண்ணாமலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறாராம். இளைய மகள் ஹேமலதா ஆலம்பூண்டி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு இரவு தூங்கினார். பின்னர் அடுத்த நாள் 12 ஆம் தேதி அதிகாலையில் பார்த்த போது அவரை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த பவானியும் அவரது குடும்பத்தினருடன் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போதும் சிறுமி கிடைக்கவில்லை.
இதனால் முதலில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர். ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிட்டதட்ட 30 நாட்களாக விசாரணை நடத்தியும் இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சிறுமியின் தாய் , தந்தை , பாட்டி, சிறுமியின் சகோதரி, அவரை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை வீட்டார் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமி காணாமல் போய் 45 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த ஹிண்ட்டும் கிடைக்காமல் சிபிசிஐடி குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்புக் காட்டில் சிறுமியை தேடும் பணிகள் நடந்தன. அது போல் சிறுமியின் வீட்டருகே இருக்கும் செங்கல் சூளை, சிறுமி காணாமல் போன போது விடிய விடிய எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் உள்ள சாம்பல்களை எடுத்து விசாரணை நடத்தப்படுகிறது. சுமார் 30 நாட்களாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில்தான் சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணின் உறவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
