திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது யார்? பொதுமக்களுக்கு அனுமதியா? உச்சநீதிமன்றம் விளக்கம்
டெல்லி: வரும் 24ம் தேதி கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தீபத்தூணில் யார் தீபம் ஏற்றுவார்கள்? பொதுமக்களுக்கு அனுமதி உண்டா? என்பது பற்றிய வழிக்காட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்தூணில் தீபம் ஏற்றக்கோரி தாக்கல் செய்த மனுவில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன் அனுமதி வழங்கினார்.
ஆனால் அதனை அப்போதைய திமுக அரசு செயல்படுத்தவில்லை. வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கல்தூணில் தீபம் ஏற்றவில்லை.
இதனை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்தனர். இதனை எதிர்த்து தவெக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வில் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் இந்த இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த இடைக்கால தீர்ப்பில் திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள கல்தூணில் ஒரேயொரு முறையாக கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த உத்தரவில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது யார்? யாரெல்லாம் மலைக்கு மேல் செல்ல வேண்டும்? என்பது பற்றிய விளக்கத்தையும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ''கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும். ஒரெயொரு முறை மட்டுமே தீபம் ஏற்றும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீபம் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவால் மட்டுமே ஏற்ற வேண்டும்.
கோவில் நிர்வாக அதிகாரி, தொல்லியல் துறை அதிகாரி, மதுரை காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு தீபம் ஏற்றும் குழுவை மதுரை ஆட்சியர் உருவாக்க வேண்டும். குழுவில் எத்தனை பேர் இருக்க வேண்டும். யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பதையும், எந்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும். மலைக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த குழுவில் உள்ளவர்கள் மட்டுமே மலைக்கு செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்பட வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு உடனடியாக அனைவரும் மலையில் இருந்து இறங்கி வர வேண்டும். தீபம் ஏற்றிய இடத்தில் எந்த பொருட்களை விட்டு வரக்கூடாது. தீபம் ஏற்றும் நாளில் மதுரை ஆட்சியர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை என்றால் மத்திய அரசிடம் இருந்தும் பாதுகாப்புக்காக படையை கோரலாம். தீபம் ஏற்றும் இடத்துக்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது'' என உச்சநீதிமன்றம் வழிக்காட்டுதல்களையும் வழங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications
