திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் ‘கிளைமாக்ஸ்’.. இதுவரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் எங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதற்கு முன்பாக, இந்த விவகாரத்தில் வந்த நீதிமன்ற உத்தரவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை இன்று நேற்று எழுந்தது அல்ல. 100 ஆண்டுகளைக் கடந்து இந்த விவகாரம் சிக்கலில் இருந்து வருகிறது.

thirupparankundram supreme court temple

1923 பிரிவி கவுன்சில் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலையின் உரிமை மற்றும் எல்லைகள் தொடர்பாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிவி கவுன்சில் (Privy Council) வழங்கிய தீர்ப்பில், மலைப்பகுதி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1996 உயர் நீதிமன்ற உத்தரவு

1994 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 21.11.1996 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். மலையின் பெரும்பகுதிக்கு உரிமையாளரான திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் மட்டுமே கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

வழக்கமான பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், வேறு எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ மலையின் வேறு பகுதிகளில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கியமான நிபந்தனை

எதிர்காலத்தில் மலையின் வேறு ஏதேனும் ஒரு இடத்தில் தீபம் ஏற்ற தேவஸ்தானம் விரும்பினால், அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு மாற்று இடத்தைத் தேர்வு செய்யும்போது, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா, தர்காவிற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளிலிருந்து குறைந்தபட்சம் 15 மீட்டர் தள்ளியிருக்கும் இடத்தை மட்டுமே தேவஸ்தானம் தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

2014 தீர்ப்பு

2014 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரித் தொடரப்பட்ட இரண்டு முக்கிய ரிட் மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து, பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு வெவ்வேறு இரு நீதிபதிகள் அமர்வுகளும், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீடுகளைத் தள்ளுபடி செய்து 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டன.

தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

2025 ஆம் ஆண்டு இராம. இரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
தீபத்தூணில் விளக்கேற்றுவதால் அருகில் உள்ள சிக்கந்தர் தர்காவின் உரிமைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி பக்த்ர்களின் மத வழிபாட்டு உரிமையைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு

கார்த்திகை தீபத் திருநாளான 2025 டிசம்பர் 3 ஆம் தேதி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மனுதாரர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) பாதுகாப்புடன் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆட்சியர் பிறப்பித்த 163 தடை உத்தரவு ரத்து

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 163-வது பிரிவு தடை உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். மேலும், தனி நீதிபதியின் அவமதிப்பு உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

தனி நீதிபதி உத்தரவு உறுதி

தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்தது.

முக்கிய நிபந்தனைகள்

தீபத்தூண் அமைந்துள்ள பகுதி கோயிலுக்குச் சொந்தமானது என உறுதி செய்த நீதிமன்றம், பொதுமக்கள் அடிவாரத்திலேயே இருக்க வேண்டும் என்றும், கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறை, தொல்லியல் துறை அனுமதியுடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

உயர் நீதிமன்றத்தின் 06.01.2026 தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வரும் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு வருகிறது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு வாதங்களையும் விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+