அக்கா கிட்ட இரவு பேசிய காஞ்சிபுரம் ஆர்த்தி.. காலை கதவை உடைத்து பார்த்த பெரியப்பா! அங்கே கண்ட காட்சி
சென்னை: உயிருக்குயிராக காதலித்து திருமணம் செய்த பெண், ஆறே மாதத்தில் இறந்து விட்டார்.. இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொந்தளித்துப்போன உறவினர்கள், ஆர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், குடும்பத்தினரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. என்ன நடந்தது?
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மூத்த மகள் ஆர்த்தி (21). அதே பகுதியை சேர்ந்த உறவினரான தம்மனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் விஜய்.

காஞ்சிபுரம் ஆர்த்தி
ஆர்த்திக்கும் விஜய்க்கும் முதலில் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மாறியுள்ளது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து தங்களது காதலை அவரவர் வீடுகளில் சொல்லி, 2 வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக விஜய் ரூ.5 லட்சம் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த பணத்தை காரணம் காட்டி ஆர்த்திக்கு பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது..
குறிப்பாக விஜய்யின் தாய் மற்றும் சகோதரர்கள் திருமணத்துக்கு செலவு செய்த ரூ.5 லட்சத்தை வரதட்சணையாக கேட்டு ஆர்த்தியை தொந்தரவு செய்தார்களாம்.. அதாவது, விஜய் வேலைக்கு சென்றதுமே, வீட்டில் தனியாக இருக்கும் ஆர்த்தியிடம் ஜாடைமாடையாக பேசி, வரதட்சணை டார்ச்சரை ஆரம்பித்து விடுவார்களாம். இதனால் மனம் நொந்து போன ஆர்த்தி, தனது சகோதரிகளுக்கு போனை போட்டு சொல்லி கண்ணீர் விட்டு வந்துள்ளார்.
இரவு போனில் பேசிய ஆர்த்தி
ஆனால், கணவர் வீட்டில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால், பல நாட்கள் ஆர்த்தி தன்னுடைய அம்மா வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக அம்மா வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து தீபாவளிக்கு முன்பு 2 வீட்டினரும் பேசி சமரசம் செய்துள்ளனர். பிறகு ஆர்த்தியை மீண்டும் கணவர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு சென்ற சில நாட்களிலேயே மறுபடியும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு டார்ச்சரை ஆரம்பித்து விட்டார்களாம்.. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சகோதரிகளிடம் போனில் பேசிட்டு, ஆர்த்தி தூங்க சென்றுள்ளார். ஆனால், நேற்று காலையில் அவரிடமிருந்து எந்த தகவலும் வராததால், பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. அதனால் ஆர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை..
அதிர்ச்சியில் பெரியப்பா
உடனடியாக ஆர்த்தியின் குடும்பத்தினர், ஆர்த்தியின் பெரியப்பாவிடம் இந்த விஷயத்தை, கொண்டு சென்றுள்ளனர்.. இதனால் பெரியப்பா, உடனடியாக ஆர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைந்திருந்ததாகவும், வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆர்த்தி வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆர்த்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கொந்தளித்த குடும்பத்தினர்
இந்த தகவலை கேட்டு ஆர்த்தியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்த்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது மரணத்தில் கணவர் வீட்டினருக்கு தொடர்பு உள்ளது.. கணவர் மற்றும் அவரது உறவினர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபாத் டிஎஸ்பி, ஆர்த்தியின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
உறவுக்காரர் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்தவரையே திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி, ஆறே மாதங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்று ஒழியும் இந்த வரதட்சணை கொடுமை
கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் என சமூகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த காலத்திலும் வரதட்சணை கொடுமை மட்டும் இன்னும் ஒழியவில்லை..
திருமணத்துக்கு செய்த செலவை பெண் வீட்டிடம் திரும்ப கேட்பதும், பணம் மற்றும் நகைக்காக மருமகளுக்கு மன உளைச்சல் கொடுப்பதும் தொடரத்தான் செய்கிறது. திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் உறவே தவிர, பணம் கொடுத்து வாங்கும் ஒப்பந்தம் அல்ல. வரதட்சணை கேட்பதும், அதற்காக பெண்களை துன்புறுத்துவதும் எப்போது முழுமையாக ஒழியும் என்பதுதான் இன்றும் சமூகத்தின் முன் நிற்கும் முதன்மையான கேள்வி...!!!


Click it and Unblock the Notifications
