வளைகுடா போறது குறைகிறது.. ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் மலையாளிகள்.. இப்படியொரு காரணமா? பின்னணி
திருவனந்தபுரம்: 'வளைகுடா நாடுகள் இல்லையென்றால் கேரளாவின் பொருளாதாரமே இல்லை' என்பதுதான் தான் உண்மை. ஏனென்றால் கேரளாவை சேர்ந்தவர்கள் இளம் வயதிலேயே வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு கூட்டம் கூட்டம் சென்று வருகின்றனர். சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் மலையாளிகள் வசிக்கும் நிலையில் தற்போது அவர்கள் வளைகுடா நாடுகளுக்கு பதில் ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருவது தெரியவந்துள்ளது.

'நம் ஊர்களில் சொல்வது போல் 'கால் காசாக இருந்தாலும் கவர்மென்ட் உத்யோகத்தில் வரும் காசா இருக்க வேண்டும்' என்பது போல் கேரளாவை எடுத்து கொண்டால் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு நல்ல மரியாதை உள்ளது. இதுவே பல இளைஞர்கள், இளம்பெண்களை வெளிநாடு செல்ல உந்தி தள்ளுகிறது.
நம் நாட்டில் கல்வியறிவில் முன்னேறிய மாநிலமாக டாப்பில் இருக்கிறது கேரளா. ஆனால் அங்கு படிப்பறிவுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. இதனால் வேலைவாய்ப்புகளை தேடி மலையாளிகள் அதிகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகள் செல்வோரின் முதல் தேர்வாக வளைகுடா நாடுகள் தான் காலம் காலமாக இருந்து வருகின்றன.
கடந்த 1970 காலக்கட்டத்தில் வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளம் அதிகரித்தது. இதனால் அங்கு வேலைக்கு அதிகமானவர்கள் தேவையான இருந்தனர். அப்போது முதல் கேரளாவை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். கேரளாவின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பெரிய பெரிய மாடி வீடுகள், பசுமையான தோட்டங்கள், ரப்பர் மரங்களுக்கு பின்னணியில் வளைகுடா நாட்டில் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பணம் இருக்கிறது.
ஆனால், இப்போது பழைய வரலாறு மெல்ல மெல்ல மாற தொடங்கியுள்ளது. "வளைகுடா போதும்.. இனி ஐரோப்பாதான் எங்களின் நிரந்தர முகவரி" என மலையாளிகள் கூட்டம் கூட்டமாக ரூட்டை மாற்றி பயணிக்க தொடங்கி உள்ளனர்.
வெளியான ஆய்வறிக்கை
கேரளா மக்கள் திடீரென்று வளைகுடா நாடுகளை தவிர்த்து ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருவதன் பின்னணியில் உள்ள காரணங்கள் வெளியாகி உள்ளன. 'கிப்ட்' என சுருக்கமாக சொல்லப்படும் 'குலாட்டி நிதி மற்றும் வரி நிறுவனம்' (Gulati Institute Of Finance and Taxation or GIFT) சார்பில் மேற்கொள்ளப்பட்ட Kerala Migration Survey ஆய்வில் இது தெளிவாகி உள்ளது.
வெளிநாட்டில் 22 லட்சம் மலையாளிகள்
கேரளாவை சேர்ந்த மலையாளிகள் வெளிநாடுகளில் எவ்வளவு பேர் பணியாற்றுகின்றனர். எங்கெங்கு பணியாற்றி வருகின்றனர் என்பது போன்ற விவரம் இதில் தெரிவிக்கப்பட்டுளளது. அதன்படி கேரளாவை சேர்ந்தவர்களில் 22 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
வளைகுடா - ஐரோப்பாவில் அதிகம்
இதில் அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் தான் வசிக்கின்றனர். மொத்தம் சுமார் 17.7 லட்சம் மலையாளிகள் வளைகுடா நாடுகளில் உள்ளனர். இதில் 38.6 சதவீத மலையாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் உள்ளனர். வெளிநாட்டில் அதிகளவில் மலையாளிகள் இருக்கும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் தான் உள்ளது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை நோக்கி செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இங்கு 4.29 லட்சம் மலையாளிகள் உள்ளனர்.
வளைகுடா மீது குறையும் ஆர்வம்
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த மலையாளிகளில் 89.2 சதவீதம் பேர் அரபு நாடுகளில் தான் வசித்தனர். இது கடந்த 2018ம் ஆண்டு நிலவரமாகும். ஆனால் தற்போது அதன் சவீதம் 80.5 சதவீதமாக சரிந்துள்ளது. அதேவேளையில் ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த கடந்த 2018 ம் tஆண்டில் வெளிநாடுகளில் இருக்கும் மலையாளிகளில் 10.8 சதவீதம் பேர் வசித்து வந்த நிலையில் தற்போது அது 19.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்களால் மாறும் டிரெண்ட்
இதற்கு முக்கிய காரணம் மலையாள பெண்கள் தான். இவர்கள் பல்வேறு பணிக்காக வெளிநாடுகளில் செல்கின்றனர். குறிப்பாக நர்சிங் மற்றும் வீட்டு வேலை உள்பட பணிக்கு அதிகமானவர்கள் செல்கின்றனர். முதலில் அவர்களின் 'பர்ஸ்ட் சாய்ஸ்' ஆக அரபு நாடுகள் இருந்தன. ஆனால் இப்போது அதிகமான மலையாள பெண்கள் வளைகுடா நாடுகளை தவிர்த்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்கின்றனர்.
வெளிநாடு செல்லும் கேரள பெண்களில் 40.5 சதவீதம் பேர் இப்போது ஐரோப்பா உள்பட பிற மேற்கத்திய நாடுகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் ஆண்களில் 14.6 சதவீதம் பேர் மட்டுமே ஐரோப்பா நோக்கி செல்கின்றனர். மலையாள ஆண்களில் முதல் சாய்ஸாக இன்றும் கூட சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தான் உள்ளன.
ஐரோப்பா மீதான ஆர்வம் அதிகரித்தது ஏன்?
தற்போது ஐரோப்பா நாடுகளை நோக்கி மலையாளிகள் செல்வதற்கு முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் உள்ளன. இதில் முதலாவது விஷயம் நிரந்தர குடியுரிமை. தற்போது வளைகுடா நாடுகளில் எவ்வளவு ஆண்டுகள் உழைத்தாலும், வேலை ஒப்பந்தம் முடிந்தால் சொந்த ஊருக்கே திரும்ப வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் ஐரோப்பியாவில் 3 முதல் 5 ஆண்டு பணியாற்றினால் நிரந்தர குடியுரிமை பெற முடியும்.
2வது விஷயம் என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் நர்சுகளுக்கு அதிக டமாண்ட் உள்ளது. கேரளாவில் அதிகமானவர்கள் நர்சிங் படிப்பை தேர்வு செய்வதால் அவர்கள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர்.
3வது விஷயம் கேரளாவின் எர்ணாகுளம், திரிச்சூர், கோட்டயம் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் கேரளாவில் உள்ள தங்களின வீடுகளை மூடிவிட்டு குடும்பத்துடன் செல்கின்றனர். இவர்களுக்கு வளைகுடா நாடுகளை விட ஐரோப்பா நாடுகள் படிக்கவும், வேலையாற்றவும் வசதியாக உள்ளன.
4வது விஷயம் ஐரோப்பிய நாடுகளில் பெரிய பெரிய பல்கலைக்கழங்கள் உள்ளன. கடந்த 2018 ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த 1.29 லட்சம் மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படிக்க சென்றனர். இ 2023ல் இந்த எண்ணிக்கை 2.5 லட்சம் மாணவர்களாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் கல்வி கட்டணம் குறைவாக உள்ளது. டியூசன் கட்டணம் தனியாக இல்லை. இதனால் நடுத்தர குடும்ப பின்னணி கொண்ட கேரளா மாணவர்கள் அதிகளவில் ஐரோப்பா நோக்கி படையெடுகின்றனர்.
5வது விஷயம் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளது. இதனால் மலையாளிகளின் பார்வை ஐரோப்பா நோக்கி திரும்பி உள்ளது.
பிரிட்டன் விசா சலுகை
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு முக்கிய காரணம் உள்ளது. அது என்னவென்றால் 'குடும்ப விசா' எனும் (Dependent / Spouse Visa) சலுகை தான். பிரிட்டனில் ஒரு நர்ஸ் அல்லது ஐடி ஊழியர் வேலைக்கு சென்றால் அவரது துணையையும் உடனடியாக அங்கு அழைத்து சென்று வேலை செய்ய வைக்க முடியும். எளிதில் அவர்களுக்கம் விசா கிடைக்கும். இதனால் தம்பதியாக வெளிநாடுகளில் 'செட்டில்' ஆக நினைக்கும் மலையாளிகளுக்கு ஐரோப்பா சிறந்த தேர்வாக உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.பதிவு செய்யப்பட்ட நர்ஸ்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அவர்கள் தங்களின் கணவர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அழைத்து செல்லலாம். ஆனால் 'கேர் வொர்க்கர், ஆராய்ச்சி சாராத படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
ஜெர்மனி - அயர்லாந்து சலுகை
ஜெர்மனியில் EU Blue Card வைத்திருக்கும் ஸ்கில்ட் பணியாளர்கள் தங்களின் மனைவியை 'ஜெர்மன் குடும்ப ரியூனியன் விசா முறையில் அழைத்து செல்லலாம். இவர்களுக்கு ேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதேபோல் அயர்லாந்து நாட்டில் நர்ஸ்கள் மற்றும் ஐடி துறையில் பணியாற்றுவோர் Critical Skills Emplyment Permit திட்டத்தின் கீழ் தங்களின் துணையை அழைத்து சென்று அவர்களை பணியாற்ற வைக்கவும் முடியும்.
ஐரோப்பாவில் எந்த நாட்டில் அதிக மலையாளிகள்?
ஐரோப்பாவில் மலையாளிகளின் முதல் தேர்வாக பிரிட்டன் உள்ளது. வெளிநாடு செல்லும் பெண்களில் 14.7 சதவீதம் பேர் பிரிட்டனை தான் தேர்வு செய்கின்றனர். அங்கு நர்ஸ்களாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல் கேரளாவில் இருந்து படிக்க செல்லும் மாணவர்களில் 4ல் ஒருவர் பிரிட்டனை தேர்வு செய்கிறார்.
2வது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இங்கு ஆங்கிலம் பேச தேவையில்லை. குறைந்த விலையில் பல்வேறு பல்கலைக்கழங்கள் உள்ளன. இதனால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பை பயில விரும்பும் மாணவர்கள் ஜெர்மனி செல்கின்றனர். அதேபோல் கேரள அரசின் 'நோர்க்கா ரூட்ஸ்' திட்டத்தில் வெளிநாடு செல்லும் நர்ஸ்களும் ஜெர்மனியை தேர்வு செய்கின்றனர்.
3வது இடத்தில் அயர்லாந்து உள்ளது. இங்கு நர்ஸ்கள் மற்றும் ஐடி துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் மலையாளிகள் இங்கு செல்கின்றனர். 4வது மற்றும் 5வது இடத்தில் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளட்டனர். இங்கு பட்ட மேற்படிப்பு படிக்க முயலும் மாணவர்கள், ஐடி துறையில் பணியாற்றும் ஊழிர்கள், ஆங்கிலம் சார்ந்த ஆ்வு படிப்புக்கு செல்லும் மலையாளிகள் அதிகம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
