மேடையில் இருக்கும் போது வந்த.. தாயாரின் மரண செய்தி! ஆனாலும் தொடர்ந்து உரையாற்றிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி இன்று காலை காலமானார். கோரப்பூர் மாணவர்களுடனான அரசு நிகழ்ச்சியில் யோகி இருந்த போது இந்த துயர செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நிகழ்ச்சியை ரத்து செய்யாமல், அவர் உரையாற்றியிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி, உத்தரகாண்ட் மாநிலத்தில் தனது பூர்வீக இல்லத்தில் இன்று காலை காலமானார். வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சாவித்திரி தேவி, இன்று காலை 11:50 மணி அளவில் உயிரிழந்ததாக யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் மகேந்திரா உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை ஹரித்துவாரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சாவித்ரி தேவியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாயார் சாவித்ரி தேவி காலமான செய்தி கிடைத்த போதும், யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தாமல் தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தினார்.
இன்று கோரக்பூரில் சுமார் 50,000 மாணவர்களுக்கு டேப்லெட்டுகளை வழங்கும் அரசு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். மேடையில் இருந்தபோதே தாயாரின் மறைவு செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், திட்டமிட்டபடி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி.. மாணவர்களிடையே உரையாற்றினார். இதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது தந்தை ஆனந்த சிங் காலமான போதும்.. உயிர் மட்ட ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து நடத்தியதோடு, ஊரடங்கு விதிகளை மதித்து இறுதி சடங்குகளில் பங்கேற்காமல் மக்கள் பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
