ஒரே நாளில்.. அடுத்தடுத்து இறங்கிய ‘இடி’.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு!
சென்னை: ஒரே நாளில், தமிழக அரசுக்கு அடுத்தடுத்து உச்சநீதிமன்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காவிரி விவகாரத்தின் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மூன்றாவது புதிய மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், நடப்பு பாசன ஆண்டில் ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி வரை கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் 11 டிஎம்சி பற்றாக்குறை நிலவியது.

தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி
நிலுவையில் உள்ள 11 டிஎம்சி நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிடக் கோரியும், நீர் பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் அணைகளின் நீர் இருப்பிற்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் நீரைப் பங்கீட்டுத் தர ஆணையத்திற்கு அறிவுறுத்தக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அமர்வில் இன்று ம்மீண்டும் விசாரணைக்கு வந்தன. ஜூலை முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த 11 டிஎம்சி பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறந்துவிடக் கோரிய தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் அதிருப்தி
நீர் பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைப் பங்கீட்டுத் தர உத்தரவிடக் கோரிய இரண்டாவது இடைக்கால மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அக்டோபர் 23 ஆம் தேதி காவிரி ஆணையம் உத்தரவிட்ட 3,000 கனஅடி நீரைக் கர்நாடகா திறக்காததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது மனுவை விசாரித்த நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் இன்னும் எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்து கொண்டே இருப்பீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முதல் 2 மனுக்களைத் தள்ளுபடி செய்ததோடு. "நீங்கள் புதிதாகத் தாக்கல் செய்துள்ள இந்த மூன்றாவது மனுவையும் நாங்கள் இப்போதே தள்ளுபடி செய்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இந்த மனுவின் அவசியத்தை விளக்க ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
தவெக அரசுக்கு பின்னடைவு
அதனை ஏற்று, 3வது மனு மீதான விசாரணையை ஒரு வார காலத்துக்கு தள்ளி வைத்தனர். இன்றைய விசாரணையில் கர்நாடக அரசுக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருந்தது. இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் நவ.,24ல் ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2 வெவ்வேறு வழக்குகளில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது, தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.




Click it and Unblock the Notifications
