அன்றைக்கு ‘சதி’ என சொன்ன திருமாவளவன்.. இப்போ முதல்வரையே வென்றவர் பாபுவாம்.. மாத்தி மாத்தி பேசுறாரே!
சென்னை: SIR மூலம் ஸ்டாலின் போன்ற ஆளுமைகள் தோற்கடிக்கப்பட்டனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தேர்தலில் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப் பெற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, நேற்று பிற்பகல் 2:24 மணிக்கு அவர் காலமானார்.

வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்தவகையில் விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், "விஎஸ் பாபு, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றியவர், பின்னர் தவெகவில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அன்றைய முதல்வர் திமுக தலைவரை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலில் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்பு, கொளத்தூர் தொகுதியில், எஸ் ஐ ஆர் மூலம் சூழ்ச்சி செய்து மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டதாகப் பேசி இருந்தார் திருமாவளவன். "தமது அரசியல் எதிரிகளை சொல்லி வைத்தாற்போல் பாஜக காலி செய்து வருகிறது. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பினராயி விஜயன் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொளத்தூரில் ஒரு லட்சம் பேரின் பெயர்கள் எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இந்தத் தகவல் கிடைத்து நான் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.
ஒரு பெண்மணி என்னைத் தொடர்புகொண்டு சதி நடக்கிறது, கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம் என்று சொன்னார். பிறகு நான் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தப்போது, "அண்ணே கொளத்தூரில் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக்கூடாது. சேகர்பாபு அண்ணனிடமும் சொல்லியிருக்கிறேன்" என்றேன்".
அதற்கு அவர் 'அதெல்லாம் ஒன்றுமில்லை. எஸ்.ஐ.ஆரை சரியாகத் தான் செய்துகொண்டிருக்கிறோம்' என்று சொன்னார். தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த எச்சரிக்கை நமக்கு வந்தது" எனப் பேசியிருந்தார் திருமாவளவன்.
அன்றைக்கு, கொளத்தூரில் சதியால் ஸ்டாலின் குறி வைத்து வீழ்த்தப்பட்டதாக பேசிய திருமாவளவன் இன்றைக்கு, விஎஸ் பாபு முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப் பெற்றார் எனக் குறிப்பிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமாவளவன் அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுவதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
