கருணாநிதி பேனா நினைவு சின்னம்.. கடலில் அமைக்க அனுமதி தரக் கூடாது.. உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமாக இருந்தவர். கருணாநிதி.. இவருக்குச் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வெளியிட்டார்.

மெரினாவில் காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது 39 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே கருணாநிதி நினைவிடம் அருகே சுமார் 42 மீ உயரத்தில் கடலில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ரூ.81 கோடி செலவில் அமையும் இந்த நினைவுச் சின்னம் கடலில் 360 மீட்ட தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காகக் கரையில் இருந்து பாலமும் கட்டப்பட உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி முதலில் அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை நிபந்தனைகளுக்கு உட்பட அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், தமிழக அரசின் இந்த முடிவு கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. சில அரசியல் தலைவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே கடலில் பேனா சின்னத்தை அமைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்... கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் மரங்களை நட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மீனவ அமைப்பும் இதற்கு எதிராக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இது குறித்து தமிழக அரசு சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications