பதட்டமாக இருக்கு.. சார்ஜ் போட முடியலயாமே.. நடுவழியில் தவிக்கும் தமிழக மாணவர்கள்.. சு.வெங்கடேசன் கவலை
மதுரை எம்பி வெங்கடேசன் வெளியுறவு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பும், பயண ஏற்பாடுகளும் தொடர்பாக வெளியுறவு அமைச்சர், எம்.பி.க்களுக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்திருப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
4 நாட்களுக்கு முன்பேயே வெங்கடேசன் எம்பி மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்,.
அதில், உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுகிறது என்றும், குண்டு வெடிப்புகள் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது என்றும் செய்திகள் வருகின்றன. ட்விட்டரில் உக்ரைனுக்கான இந்திய தூதர் விடுத்துள்ள இந்தச் செய்தி அங்குள்ள கடுமையான சூழலை உறுதி செய்கிறது.

பதற்றம்
"நிலைமை மிகப் பதற்றமாக உள்ளது. நிச்சயமற்றதாகவும் உள்ளது. இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது.. வான் வழி மூடப்பட்டுவிட்டது. ரயில் அட்டவணைகள் கடைபிடிக்கப்படவில்லை. சாலைகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. "இத்தகைய சூழலில் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்கடேசன் எம்பி
இந்திய வெளியுறவு அமைச்சகமும் உச்சபட்ச அளவிலான அரசு முறை தொடர்புகளின் மூலம் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதி செய்ய உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும்" என்று அவர் கொண்டிருந்தார்.. இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பும், பயண ஏற்பாடுகளும் தொடர்பாக வெளியுறவு அமைச்சர், எம்.பி.க்களுக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், இது தொடர்பாக தானே நேரடியாக களமிறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அழைப்புகள்
எம்பி வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது: "உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின்/ இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, பயண ஏற்பாடுகள் பற்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெற்றோர்களின்/ உறவினர்களின் தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து நானும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அமைச்சக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். பெற்றோர் உடன் அங்கிருந்து தொடர்பு கொள்கிறவர்களின் அலைபேசியில் சார்ஜ் தீர்ந்து விடுவதால், பயணத்தின் நடுவே சார்ஜ் போட முடியாமல் பேச முடியாமல் போகிறது. இது பதட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
Recommended Video

கவலைகள்
தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள் அரசு தரப்பு ஏற்பாடுகள் பற்றி விவரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவெகியா எல்லைகள் வழியாக வருபவர்களுக்கு தொடர்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலை பேசி/ மற்ற தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. மேற்கூறிய நான்கு நாடுகளின் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள உதவி தொலைபேசி எண்கள்/ இ மெயில்/ வாட்ஸ் அப் எண்கள் தரப்பட்டுள்ளன. இது தவிர குறிப்பான கவலைகள், தகவல்கள் இருப்பின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தின் இ மெயில், தொலை பேசி எண்கள் தரப்பட்டுள்ளன. இத்தகைய விவரங்கள் அக்கடிதத்தில் உள்ளன.

நேரடி முயற்சி
பெற்றோர் இடம் இருந்து வரும் தகவல்கள் உரிய மட்டத்திற்கு என்னுடைய நாடாளுமன்ற அலுவலகத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்படும். இந்திய குடிமக்கள் அனைவரும் ஊறு ஏதும் இல்லாமல் பாதுகாக்கப்படவும், பயணங்கள் அமையவும் தொடர்ந்து முயற்சிகளை நானும் அமைச்சக மட்டத்தில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்... இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications