இனிமே நம்மதான்.. வேர்ல்ட் லெவல் ஃபேமஸ் ஆகப் போகுது மதுரை! இங்கிலாந்து நாட்டுடன் முக்கிய ஒப்பந்தம்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்ணல் பென்னிகுவிக்கிற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இங்கிலாந்து கேம்பரலி நகரம்- மதுரை இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. கலாச்சார இணைப்புத் திட்டத்தில் கேம்பர்லீ - மதுரை நகரங்களை கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் பொங்கல் திருநாளில் கையெழுத்தாக திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து சர்ரே ஹுத் மாகாண மேயர் லூயிஸ் ஆஷ்பெரி கூறியுள்ளார். மதுரையில் வளர்ச்சியில், சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் முயற்சியில் இது அடுத்தகட்டமாக பார்க்கப்படுகிறது என்கின்றனர் மதுரையன்ஸ்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னி குயிக். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த அணையை அவர் கட்டி முடித்தார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் பென்னி குயிக் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் பிறந்த கேம்பர்லீ நகரத்தில் தமிழக அரசு சார்பில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

கர்னல் பென்னிகுயிக்
இந்நிலையில், கர்னல் பென்னிகுயிக் தமிழகம் இடையே உள்ள தொடர்பை பறைசாற்றும் வகையில், கலாச்சார இணைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மற்றும் கேம்பர்லீ நகரங்களைக் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அந்த வகையில் இரு நகரங்களுக்கும் இடையேயான கலாச்சார இணைப்பு ஒப்பந்தம் பொங்கல் திருநாளில் மதுரையில் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை கேம்பர்லீ ஒப்பந்தம்
இதற்காக இங்கிலாந்து சர்ரே ஹீத் மாகாண மேயர் லூயிஸ் ஆஷ்பெரி மற்றும் கவுன்சிலர் ஆகியோர் 5 நாள் பயணமாக சென்னை வந்தனர். விமான நிலையத்தில் சர்ரே ஹீத் மாகாண மேயர் லூயிஸ் ஆஷ்பெரியை கேம்பர்லீ தமிழர் பிரிட்டீஷ் அசோசியேஷன் செயலாளர் சந்தன பீர் ஒளி வரவேற்றார்.
கலாச்சார இணைப்பு திட்டம்
பின்னர் சர்ரே ஹீத் மாகாண மேயர் லூயிஸ் ஆஷ்பெரி கூறியதாவது: கேம்பர்லீ- மதுரை இரு நகரங்களுக்கு இடையே இணைப்பது வரலாற்று ரீதியான தொடர்பை புதுப்பிப்பதுடன் எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும். குறிப்பாக கலாச்சார பரிமாற்றம், தொழில் முதலீடுகள், கல்வி போன்ற அம்சங்களை மேம்படுத்தும். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒப்பந்தம் குறித்து கலந்துரையாட உள்ளோம்.
பொங்கல் விழா மதுரை
அதன் பின்னர் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்குச் சென்று ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் பார்வையிடுவோம். இறுதியாக இரு நகரங்களின் கலாச்சார இணைப்பு திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். இது பென்னி குயிக் என்ற மாமனிதருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். 100 ஆண்டுகள் கடந்தும் மதுரை மக்கள் பென்னிகுவீக் மீது மரியாதை வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என லூயிஸ் ஆஷ்பெரி கூறினார்.












Click it and Unblock the Notifications