சாக்கு மூட்டையில் கட்டு கட்டாய் பணம்..மொத்தம் 17.5 லட்சமாம்! யோசிக்காமல் சட்டென சிவபக்தை செய்த செயல்
மதுரை: மதுரையில் சாக்கு மூட்டையில் சாலையின் நடுவே கிடந்த கட்டுகட்டான 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. பணத்தை ஒப்படைத்த பெண் சிவ பக்தையை பாராட்டிய மதுரை போலீசார், அது ஹவாலா பணமா? வேறு ஏதேனும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சிவ பக்தரான செல்வமாலினி. இவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்றிரவு கோவிலில் இருந்து செல்வமாலினி வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார் .
அப்போது மதுரை வக்கில் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்த போது சாக்குமூட்டையில் 500 ரூபாய் பணக் கட்டு இருப்பது போல தெரிந்துள்ளது.

இதனை பார்த்து பதற்றமடைந்த செல்வமாலினி அருகில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறை வாகனத்தில் இருந்த காவலரை அழைத்து கூறியுள்ளார். பின்னர் சாக்குமூட்டையை பிரித்துபார்த்தபோது 500 ரூபாய் பணம் 17 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கட்டுகட்டாக இருந்துள்ளது. பின்னர் செல்வமாலினி அந்த சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு எடுத்துசென்று ஒப்படைத்துள்ளார்.
அப்போது செல்வமாலினியின் நேர்மையை பார்த்து காவல்துறையினர் அப்பெண்ணுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சாக்கு மூட்டையில் கிடந்த பணம் ஹாவாலா பணமா? வேறு யாரும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா என விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications