Magalir urimai thogai : குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி..ஒரே பாலில் பல கோல் போட்ட ஸ்டாலின்! அதிமுக அப்படியே பதறிருச்சே!
சென்னை: மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக காலைப் பொழுதில் தமிழக பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை அடுத்து திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பும் அதிமுக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றன. ஆனால் உண்மையில் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதுவும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் இந்த 5000 ரூபாய் எதிர்பாராத பரிசு தொகையை அனைவருமே வரவேற்று இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்..
தமிழக அரசியல் அரங்கில் சமீப நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் திடீரென ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட சம்பவம். இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல தரப்பினரிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அதிகாலையில் வங்கிக் கணக்கில் பணம் வந்ததாக தகவல் கிடைத்ததும், மாநிலம் முழுவதும் பல இல்லத்தரசிகள் எதிர்பாராத மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். சிலர் இது அரசு உதவியா அல்லது வங்கியின் தவறா என்ற குழப்பத்திலும் இருந்தனர்.

மகளிர் உரிமைத் தொகை
பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட விளக்கம் மூலம் இது அரசின் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் வந்த நிதி என உறுதி செய்யப்பட்டது. பெண்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் தொகை உயர்த்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பெண்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு, குடும்பச் செலவுகளின் அழுத்தம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டதாக ஆளும் திமுக சொல்கிறது.
5000 ரூபாய் உதவி
மாறாக, எதிர்க்கட்சிகள் இதை நேரடி அரசியல் யுக்தியாகவே பார்க்கின்றன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கை தேர்தலுக்கு முன் பெண்களின் முன் வாக்குகளை ஈர்க்கும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று விமர்சித்துள்ளார். ஒரு திட்டம் நடைமுறையில் இருக்கும் போது அதை நிறுத்த முடியாது என்பதும், தேர்தல் பயம் காரணமாகவே இந்த திடீர் நிதி விடுவிப்பு நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் அரசின் நோக்கம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன.
பெண்கள் நலத் திட்டம்
அரசியல் விமர்சகர்கள் பார்வையில், பெண்களை மையமாகக் கொண்ட நிதி உதவித் திட்டங்கள் இந்திய அரசியலில் புதியதல்ல. பல மாநிலங்களில் தேர்தல் காலங்களில் நேரடி நிதி உதவிகள் அரசியல் கணக்கீட்டில் முக்கிய பங்காற்றியுள்ளன. தமிழகத்திலும் பெண்கள் வாக்காளர்களின் தாக்கம் அதிகம் என்பதால், இந்த நடவடிக்கை தேர்தல் முன் சமூக மனநிலையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு போன்ற பொருளாதார சவால்கள் பேசப்படும் நேரத்தில் 5,000 நிதி உதவி உடனடி நிவாரண உணர்வை உருவாக்குகிறது என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
தமிழக அரசு உதவி
இந்நிலையில், அரசியல் விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், பொதுமக்கள் மட்டத்தில் உருவான மனநிலை வேறுபட்டதாகக் காணப்படுகிறது. அரசியல் சார்புகளைத் தாண்டி, பல பெண்கள் இந்த தொகையை நடைமுறை வாழ்க்கைக்கு உதவியாகவே பார்க்கின்றனர். குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, கடன் சுமை போன்ற தேவைகளில் இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணமே அதிகமாகக் காணப்படுகிறது. அதே நேரத்தில், இந்த நடவடிக்கை தொடர்ந்து அமல்படுத்தப்படுமா அல்லது தேர்தல் முடிந்ததும் முடிந்து விடுமா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
தேர்தல் தாக்கம்
மொத்தத்தில், இந்த ரூ.5,000 வரவு ஒரு சாதாரண நிதி உதவி என்பதனை தாண்டி அரசியல் வியூகம், சமூக பொருளாதார சூழல் மற்றும் தேர்தல் லாபம் என அனைத்தும் ஒரே இடத்தில் புள்ளியில் இணையும் மெகா ப்ளானாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் விமர்சனங்களைத் தொடர்ந்தாலும், பெண்கள் வாக்காளர்களின் மனநிலையில் இந்த நடவடிக்கை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரவிருக்கும் தேர்தல் நிச்சயமாக காட்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications