குடும்ப தலைவிக்கு 1000 யாருக்கு கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்.. லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தான் ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பது தொடர்பான முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. அப்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மேலும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதையடுத்து தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை அண்ணா பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்ப தலைவிகளின் விபரங்களை சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரூ.1000 மகளிர் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பது பற்றி தகவல் கசிந்துள்ளது.
அதன்படி 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படாது. 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிகளுக்கும், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெரும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெண் அரசு ஊழியர்களுக்கும், பெண் எம்எல்ஏ, எம்பிக்களுக்கும், சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஓய்வூதியம் பெறுவோரும் இந்த ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என சொல்லப்படுகிறது. இருப்பினும் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெறுவோரின் குடும்பத்துக்கு இந்த உரிமைத்தொகை கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மொத்தமாக இந்த திட்டத்தில் 1 கோடி பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.
மேலும் திட்டத்தில் பயன்பெறும் குடும்ப தலைவிகள் எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோரில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வீடியோ அறிவிப்பில், ‛‛ரூ.1000 உரிமைத்தொகை என்பது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமாக செயல்படுத்தப்படும். எந்த புகாரும் இன்றி திட்டமிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒரு கோடி குடும்ப தலைவிகள் பயன்பெற உள்ளனர். உரிய பயனாளிகளை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மேலும் உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இந்த திட்டம் பயனாளிகளை சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பழங்குடியினர், இதர ஆதரவற்றவர்களுக்கும், சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும். அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்'' என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications