மகாத்மா காந்தி படுகொலை நாள் அல்ல- மகாத்மா காந்தியின் "புண்ணியதிதி".. சொல்வது ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தேசப் பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி 30. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் என குறிப்பிடாமல் "மகாத்மா காந்தியின் புண்ணியதிதி" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
தேசவிடுதலைக்காக அறவழியில் போராடிய அண்ணல் மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியாவில் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி நாதுராம் கோட்சே எனும் இந்துத்துவா பயங்கரவாதியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நாதுராம் கோட்சே இந்து மகாசபை எனும் இந்துத்துவா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். கோட்சேவுடன் அவரது கூட்டாளிகளான 65 வயது சாவர்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கில் கோட்சே. ஆப்தே தூக்கிலிடப்பட்டனர்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினமாகவும் மதநல்லிணக்க நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு உறுதி மொழியேற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தி மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜன.30ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. அதனால், ஜன.30ம் நாளன்று மாவட்டத் தலைநகரங்களில் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது.

அதே நேரத்தில் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும். இவ்வாறு ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி படுகொலை நாளை புண்ணியதிதி என ஆளுநர் ரவி குறிப்பிட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications