Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024-ன் சர்ச்சைப் புயல்.. இளம் சாமியார் மகாவிஷ்ணு.. எக்குத்தப்பாக ஏழரையை கூட்டிய போதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டின் சர்ச்சைப் புயல் சாமியார் என்றால் அது இந்த இளைஞர் தான். மகாவிஷ்ணு என்ற 30 வயதான இந்த இளைஞர், அரசுப் பள்ளிகளில் ஆன்மீக போதனை நடத்தி, ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடமே எக்குத்தப்பாக எகிறியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு போதனை வழங்கச் சென்றிருந்த மகாவிஷ்ணு சென்னை திரும்பியதுமே தட்டித் தூக்கி கம்பி எண்ண வைத்தது சென்னை போலீஸ். வெளிநாடுகளுக்கும் தனது போதனைக் கிளைகளைப் பரப்பி இருந்த மகாவிஷ்ணு, ஓவர் நைட்டில் சிறைக் கம்பிகளுக்குள் சென்றார்.

தலைநகர் சென்னையின் சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் "தன்னை அறிதல்" என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதனை 'பரம்பொருள் பவுண்டேஷன்' என்ற பெயரிலான தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்ற இளைஞர் நடத்தினார்.

year ender 2024 mahavishnu school

அப்போது, நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றும், உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் எனவும் மாணவிகள் மத்தியில் பேசினார் மகாவிஷ்ணு. தொடர்ந்து மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து இசையை ஒலிக்க விட்டு அவர்களின் மன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சைத் தொடர்ந்தார் விஷ்ணு. அவரது பேச்சில் பல மாணவிகள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்.

தொடர்ந்து பேசிய மகாவிஷ்ணு, எப்படியாவது வாழ்ந்து எப்படியாவது இறந்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அடுத்த பிறவி கொடூரமாக இருக்கும். இப்போது பலர் கை இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். கண் இல்லாமல் பிறக்கிறார்கள். பல நோய்களுடன் பிறக்கிறார்கள். இறைவன் ஏன் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைக்கவில்லை? ஒருவன் கோடீஸ்வரனாக, இன்னொருவன் ஏழையாக இருக்கிறான். ஒருவன் நல்லவனாக இருக்கிறான். ஒருவன் கிரிமினலாக இருக்கிறான். ஏன் இப்படி எல்லாம்? போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது என இஷ்டத்துக்குப் பேசினார் மகாவிஷ்ணு. நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார் என்றும் கோட் செய்தார்.

அங்கிருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வந்து மறுபிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தார். இதனால் அந்த ஆசிரியருக்கும், விஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? எனச் சீறினார் மகாவிஷ்ணு. தனக்கு ஆதரவாக மாணவர்களையும் ஆமோதிக்கச் செய்தார்.

இந்த வீடியோவை விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், இதனை பார்த்த கல்வியாளர்களும், பொதுமக்களும் கொந்தளித்தனர். சமூக வலைதளங்களில் மக்கள் இதற்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு, இந்த மகாவிஷ்ணு மீதும், இவரை பேச அழைத்த பள்ளி நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்கள் வலுத்தன. இதையடுத்து, இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் மத்தியில் பேசினார். அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், பள்ளி நிகழ்ச்சிகளில் யாரை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பதில் ஆசிரியர்களுக்கு புரிதல் இருக்க வேண்டும் என்றும் பேசிய அவர், பிற்போக்குத் தனமான நிகழ்ச்சியை நடத்திய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும், அறிவியலுக்கு முரணான மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி" என்று தெரிவித்தார்.

இதையடுத்து மகாவிஷ்ணுவை கைது செய்ய போலிசார் தீவிரம் காட்டினர். அதற்குள் மகாவிஷ்ணு அடுத்த போதனைக்கு ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியதுமே மகாவிஷ்ணுவை ஏர்போர்ட்டிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணுவை நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேடை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டார் மகாவிஷ்ணு. மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. ஒருவேளை என்னுடைய பேச்சு அப்படி புரிந்துகொள்ளப்பட்டு புண்படுத்தி இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் எனத் தெரிவித்தார்.

பின்னர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததுமே, பெண்கள், சிறுவர்களுக்கு தீட்சை வழங்கி மிரள வைத்தார் மகாவிஷ்ணு. அதன் பிறகு சில காலமாக ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்து வந்த மகாவிஷ்ணு அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது, நான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஒளவையார் அரிது அரிது மானிடரா பிறத்தல் அரிது.. அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது' என்றார். அவர்தான் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றும் சொல்லி இருக்கிறார். ஊழ்வினை என வள்ளுவர் சொன்னார். அதைத்தான் நான் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசும் போது சொன்னேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

நான் அந்தப் பள்ளியில் இருந்த ஆசிரியரைத் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. ஊழ்வினை பற்றி பொதுவாகச் சொன்னது அவரை பாதித்துவிட்டது. அதை முழுமையாக உணர்ந்தேன். அங்கே நான் அன்று கோபமாகப் பேசவில்லை. ஆனால், கொஞ்சம் சத்தமாகப் பேசிவிட்டேன். அப்படிப் பேசியது தவறுதான். யாருக்காக இருந்தாலும் அடி சறுக்கும். எனக்கும் அப்படிதான் சறுக்கிவிட்டது என்றார்.

year ender 2024 mahavishnu school

திடீரென்று சிறைக்குப் போகும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை மாறியது ஏன்? அது நீங்கள் செய்த தர்மத்தாலா? அல்லது கர்மத்தாலா? என்ற கேள்விக்கு பதிலளித்த மகாவிஷ்ணு, "சிறைக்குப் போவது ஒன்றும் தவறானது இல்லையே? விஷ்ணு கூட சிறையில்தான் பிறந்தார். நீ நல்லது செய். மக்களுக்குச் சேவை. அப்படி வாழ்ந்தால் சிறைக்கே போகமாட்டாய் என்று நான் எங்கேயும் போதிக்கவில்லை. நான் செய்த கர்ம வினைக்கு ஏற்ப என் வாழ்க்கை அமைகிறது. அதில் வருவது எதுவும் நல்லதும் கிடையாது. கெட்டதும் கிடையாது. அது அனுபவம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஆன்மிகம்" என்று கூறினார்.

மகாவிஷ்ணு, சிறுவனாக இருந்தபோது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அசத்தப் போவது யாரு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மதுரை மகா என்ற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களின் கவனம் ஈர்த்தார் மகாவிஷ்ணு. அதன் பிறகுதான் தனது பேச்சாற்றலை பயன்படுத்தி, தனது ரூட்டை ஆன்மிகத்தை நோக்கி மாற்றினார். திருப்பூரில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் சென்று ஆன்மீக வகுப்பு எடுத்து வரும் மகா விஷ்ணு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆன்மீக வகுப்புகளை நடத்தியுள்ளார். யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார் மகாவிஷ்ணு. அதன் மூலம் பல லட்சக்கணக்கானோரைச் சென்றடைந்துள்ளார். இப்படியான சூழலில் தான் அரசுப்பள்ளியில் அவர் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவு பாவம் அவருக்கு ஏழரையை கூட்டி, அவரது வளர்ச்சிப் பயணத்தில் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. ஆனாலும், அசராமல் திரும்பி வந்திருக்கிறார் மகாவிஷ்ணு. 2024 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சர்ச்சைப் புயல்களில் மகாவிஷ்ணுவும் நிச்சயம் ஒருவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+