ஈசிஆர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சேர்ந்தவர்.. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஷாக்!
சென்னை: சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும் அதனை திமுக மீது தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பழனிசாமி கூறி வருவதாகவும், அதிமுகவினர் செய்யும் குற்றங்களுக்கும் திமுக மீது பழி சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ் பாரதி எடப்பாடி பழனிசாமி மீதும் அதிமுக மீதும் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், ஈசிஆர் விவகாரம் குறித்தும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சில முக்கிய கருத்துகளை கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், தினமும் 5 பொய்களை சொல்வதென சத்தியம் செய்து கொண்டு அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும், அதனை திமுகவுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சித்தார்கள். ஆனால் அதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது. 2 நாட்களுக்கு முன் ஈசிஆரில் நடந்த சம்பவத்தையும் திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசி இருக்கிறார். திமுக கொடியுடன் சென்றால், குற்றம் செய்வதற்கு லைசென்ஸா என்று கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அந்த வீடியோவில் இருந்த கார் ஒன்று, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனுக்கு சொந்தமானது. அந்த காரினை பயன்படுத்தியவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதிமுகவினர் செய்யும் குற்றங்களுக்கு கூட திமுக மீது பழி சுமத்துகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் அதிமுகவினர் செய்த குற்றங்களின் எண்ணிக்கை ஏராளம். திமுகவின் கொடியை கட்டிக் கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
